பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜூன் 25

மறைக்கப்பட்ட நமது வரலாறுகள்

மறைக்கப்பட்ட  நமது வரலாறுகள். இவையெல்லாம்  பள்ளி கல்லூரிகளில்  பாடங்களாக வரட்டும்.


Stanley Rajan
முதலில் பாண்டிய மன்னர்களாலும் பின் நாயக்கமன்னர்களாலும் ஆளபட்டு , நாயக்கர் காலத்தில் பிரிக்கபட்ட சீர்மை எனப்படும் சிவகங்கை சீமையாக விளங்கியது அந்த சமஸ்தானம்
அந்த சமஸ்தானம் நாயக்க மன்னர்கள் சரிந்தபின் தனி ராஜ்யமாக திகழ்ந்தது, ஆற்காடு நவாபுக்கும் அவர்கள் கட்டுபட்டதாக வரலாறு இல்லை.
நாம் படித்து கொண்டிருக்கும் ராபர் கிளைவ் வரலாற்று காலத்தில் நடந்த வரலாறு இது, கிளைவ் இந்தியாவில் பிரிட்டிசாரின் ஆட்சிக்கு வழிகோலியபொழுது ஆற்காடு நவாபினை எப்படி கட்டுபடுத்தினான் என்பதை கண்டோம் அல்லவா? அப்படி பலம் பெற்றபின் நவாப் தனக்கு அடங்கா பகுதிகளில் பிரிட்டானியரை ஏவிவிட்டான்
அவன் தன் குடும்ப சண்டையில் பிரிட்டானியர் உதவியினை கோரி அவர்கள் பிடியில் சிக்கியிருந்தான், கம்பெனி கொரும் மிகபெரிய தொகையினை கொடுக்க வழியின்றி இதெல்லாம் என் நாடு, எனக்கு கப்பம் கட்ட அவர்கள் மறுக்கின்றார்கள், முடிந்தால் பிரித்து நீங்களே வைத்து கொள்ளுங்கள் என கை காட்டினான்.
பிரிட்டானியருக்கு பெரும் தொகை கிடைத்தது என்பதால் அவர்களும் வந்தார்கள், அவர்களை பொருத்தவரை பணமே குறி, நவாப் அவர்களுக்கு கிடைத்த பணம் காய்க்கும் மரம் அவ்வளவுதான்
தனக்கு அடங்கா தென்னக சமஸ்தானங்களின் மேல் கம்பெனியாரை ஏவிவிடுவான் நவாப், கம்பெனியாரும் அவர்களின் இந்திய உருவாக்கமான கான்சாகிப் (மருதநாயகம்) என்பவனும் பாய்ந்து யுத்தம் செய்வார்கள்
அப்பொழுது புலித்தேவனை வீழ்த்திவிட்டு சிவகங்கை பக்கம் ஆண்டு கொண்டிருந்த முத்துவடுகநாதரை நெருக்கினார்கள், கட்டபொம்மன் அப்பொழுது ஆட்சியில் இல்லை அவரின் தந்தைதான் ஆண்டு கொண்டிருந்தார்
சரி முத்துவடுகநாதரை ஏன் நெருக்கினார்கள்?
மதுரையினை ஆண்ட விஜயநாயக்கன் மேல் கான்சாகிப் தலமையில் படை எடுத்தது நவாப் கோஷ்டி, அதை முறியடித்து மதுரையினை காத்தார் வடுகநாதர்
மதுரையினை ஆள்வது தஞ்சை மராட்டியரா? ஆற்காடு நவாபா? இல்லை மைசூர் சமஸ்தானமா என ஒரு குழப்பம் இருந்த காலமது, மதுரைக்கு எல்லா தரப்பு மேலும் கண் இருந்தது.
அதை தடுத்து மதுரையினை நாயக்க அரசனுக்கே திரும்ப கொடுத்தார் முத்துவடுகநாதர்
அழிந்த குளத்தில் மீன் பிடிப்பது போல மொகலாயர் தளர்ந்தவுடன் இங்கே குழப்பம் கூடிற்று அணி அணியாக பிரிந்தோ தனித்தோ சண்டையிட்டனர், இதை பிரிட்டானியர் கூலிபடையாக புகுந்து காசு பார்த்தனர்
முத்துவடுகநாதர் தென்னகத்தின் அமைதியினையும் போரின் வெற்றியினை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தது வெள்ளையனுக்கு கோபத்தை கூட்டிற்று
அந்த கோபத்தில்தான் பின் இவர்பக்கம் வந்தார்கள், இவர் இருக்கும்வரை தென்னகம் நமக்கல்ல எனும் அச்சம் இருந்தது.
புலிதேவனுக்கு அடுத்து சிவகங்கைக்குத்தான் குறி வைத்தனர் வெள்ளையர், வந்து மிரட்டினர், அதேதான் "நீர் கப்பம் கட்டவில்லையாமே, நவாப் செலவுக்கு கஷ்டபடுகின்றார், இது அவரின் நாடு ஒழுங்காக எடு கப்பம்" என மிரட்டல்கள்
1749ல் இருந்து ஆட்சி செய்ஹ முத்துவடுகநாத உடையார் சீறினார், அவர் நவாபுக்கு வரி கட்டியதில்லை என்பதால் முடியாது என மறுத்தார், 1760 வாக்கில் மிகபெரும் யுத்தம் வெடித்தது. ராமநாதபுரத்து வீரனான கான்சாகிப் தலமையில் வந்த படையினை விரட்டி அடித்தார் வடுகநாதர்
ஆம் வீராதி வீரனான கான்சாகிப் வடுகநாதரை வெல்லமுடியாமல் ஓடினான், இவ்வளவுக்கும் அவர் பலவீனம் பார்த்து வந்தான்
ஆம் சிவகங்கை மக்களுக்கும் அரசுக்கும் காளையார் கோவில் மகா மகா முக்கியமானது, அனுதினமும் அதை வணங்கித்தான் வேலை தொடங்குவர் சிவகங்கை சமஸ்தானத்தார். அது அவர்கள் உயிரில் கலந்த ஆலயம்
அதை வணங்க முத்துவடுகநாதர் சென்றிருந்தபொழுதுதான் சிவகங்கையினை முற்றுகையிட்டான் கான்சாகிப் அவனை விரட்டி அடித்தார் வடுகநாதர்
இதெல்லாம் 1763ல் நடந்த வரலாறுகள். இந்த போர்கள் நடக்கும் பொழுது கிளைவ் இந்தியாவில்தான் இருந்தான் ஆனால் வங்கத்தில் பிசி
கிளைவ் சார்பாக டீகார்டு என்பவன் இருந்தான்
சிவகங்கையினை கைபற்றமுடியாத கான்சாகிப் டீகார்டு கோஷ்டி இராமநாதபுரத்தை குறிவைத்தது, அதை கைபற்றினான் மார்ட்டினஸ் எனும் வெள்ளையன். மாட்டினஸுக்கு உதவியன ராயப்பன் எனும் கள்ள ராயப்பன்
ராயப்பன் வடுகநாதருடன் இருந்தவனே, ஆனால் அதிகார ஆசை காட்டி அவன் துணையுடன் இந்த வெற்றியினை பெற்றான் வெள்ளையன். இந்தியர் சிலருக்கு சில விலை உண்டு என்பது கிளைவ் சொல்லி கொடுத்தபாடம்.
ஆனால் இராமநாதபுரம் மறவர் சேனை வடுகநாதரை நாடியது, பெரும்படையுடன் ராமநாதபுரத்தை கைபற்றினார் வடுகநாதர்.
(ராமநாதபுரம் என்றால் வறண்ட பகுதிதான் ஆனால் அதை அன்மித்த க்டலும் அதன் முத்து முதலான பொருட்களும் அவர்களின் பெரும் வருமானமாயின, டச்சுக்காரரிடம் இருந்த முத்து வியாபாரத்தை குறிவைத்தே அதை தாக்கி கைபற்றினான் வெள்ளையன்)
முத்துவடுகநாதரின் பெரும் பலம் அவரின் படை, அதைவிட பலம் அந்த மருது சகோதரர்கள், படையினை ஒரு பிரிவாக பிரித்து அவர்கள் சண்டையிட்ட வீரத்துக்கு எவனும் அன்று நிகரில்லை. வாள்முதல் வளறிவரை அவர்களால் அப்படி பயன்படுத்தபட்டது
அடிபட்டால் ஓடுவதும், அசிங்கபடாமல் வந்து அடிவாங்குவதும், பின் தந்திரத்தால் வெல்வதும் வெள்ளையன் பாணி.
அவனை ஓட அடிக்க வடுகநாதருக்கும் ஆசை, புலிதேவனுக்கும் ஆசைதான். முறுக அடித்து சென்னை கோட்டையினை தரைமட்டமாக்கியிருந்தால் அவன் ஓடி இருப்பான்
ஆனால் இடையில் ஏகபட்ட சமஸ்தானம், போர் சிக்கல் இதனால் தங்கள் எல்லைக்குள் இருந்துமட்டும் போரிட இவர்களுக்கு சிக்கல் இருந்தது, வெள்ளையன் பலம் அதுவே
ஆசுவாசபடுத்திய வெள்ளைபடை பலமாக வந்தும் வடுகநாதரை வீழ்த்தமுடியவில்லை, இனி யுத்தம் உதவாது என உணர்ந்த வெள்ளை தரப்பு வஞ்சகத்தை கையில் எடுத்தது
இனி போர் இல்லை, கப்பம் வேண்டாம் என தூதுவிட்ட கம்பெனி வஞ்சக திட்டமிட்டு அவரை நோட்டமிட்டது, கூலிக்கு உளவு சொல்லும் கூட்டம் சிவகங்கை சீமையில் ஊடுருவபட்டு அது அரண்மனைக்குள்ளும் புகுந்தது
அன்று 1774ம் ஆண்டு ஒரு ஆடிமாதம் என்கின்றார்கள்., அன்று காளையார் கோவிலில் நாட்டுக்கான‌ போரில் இறந்த வீரர்களுக்கான அஞ்சலியும் திதியும் நடந்திருக்கின்றது
இனி போர் இல்லை என தன் பாதுகாப்பினை குறைத்த வடுகநாதர் ஆபத்து தெரியாமல் பாதுகாப்பே இல்லாமல் காளையார் கோவிலுக்கு சென்றிருந்தார்
இதை அறிந்த வெள்ளைபடை அவரை வளைத்து வெட்ட திட்டமிட்டது, அதே நேரம் அவரின் உற்ற மெய்காப்பாளர்களான மருது பாண்டியர் என்ன செய்வார்களோ எனும் அச்சமும் இருந்தது.
இதனால் இரு படை தயாரானது பான்சோர் தலமையில் ஒரு சிறிய படை வடுகநாதரை கொல்லவும் இன்னொரு படை மருது சகோதரர்களை வளைக்கவும் தயாரானது
அந்த காளையார்கோவில் நிகழ்வுக்கு மருது சகோதரர்களும் வந்ததாகத்தான் வரலாறு சொல்கின்றது, வரும் வழியில் பாதுகாப்பு இல்லா முத்துவடுகநாதரை தொலைவில் இருந்தே பான்சோர் சுட்டு கொன்றான்
அங்கு சிறிய சண்டை மூண்டிருக்கின்றது, மருது சகோதரர்களை தன் படையால் வளைக்க சொல்லிவிட்டு தப்பிவிட்டான் பான்சோர்
மாபெரும் வீரனும் மதுரை, இராமநாதபுரம் அரசுகளை ஆங்கிலபடையிடம் இருந்து காத்தவனுமான மாவீரன் முத்துவடுகநாதன் அங்கே வஞ்சகமாக கொல்லபட்டு கிடந்தான்.
(எனினும் இது பிரிட்டனில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, பான்சோர் அவசரபட்டு தலமை உத்தரவுக்கு கீழ்படியாமல் செய்த காரியம் இது அவனை தண்டித்துவிட்டோம் என பூசிமெழுகியது கம்பெனி)
அதன் பின் சுதாரித்த மருதுசகோதரர்கள் தங்கள் வீரவிசுவாசத்தை காட்டினர், ராணியார் வேலு நாச்சியாரையும் குடும்பத்தையும் விருப்பாச்சிக்கு கடத்தி காத்தனர், அது பழனிக்கும் திண்டுகல்லுக்கும் இடையே இருந்த ஊர், அருகில் ஹைதர் அலியின் மைசூர் சமஸ்தானத்து எல்லை இருந்தது, அப்படியே ஹைதர் அலி ஆதரவினை பெற்றனர் நாச்சியாரும் மருதிருவரும்
பின் படையோடு வந்து வெள்ளையனை விரட்டி நாட்டை காத்து பன்னெடுங்காலம் ஆண்டு பின் வீரபோர் புரிந்து அனைவரும் வீரமரணம் அடைந்தது வரலாறு
வேலு நாச்சியாரும், மருதுபாண்டியரும் ஈடுபட்ட மாபெரும் போராட்டம் தென்னகத்து வீரவரலாறு. அப்பொழுதும் வஞ்சகம், சூது, ஏமாற்றம் என்றுதான் வெள்ளையன் வெற்றி இருந்தது
முத்துவடுகநாதர் ஏற்றிவைத்த விடுதலைதீ நாச்சியார், மருது சகோதரர் என பற்றி எரிந்தது, அதை அணையாமல் மறவர்பூமி காத்து வந்தது
அந்த தொடர்ச்சியில்தான் பின்னாளில் முத்துராமலிங்க தேவர் வந்தார் இன்னும் பல வீரர்கள் வந்தனர்
முத்துவடுகநாதரின் தியாயகமே நேதாஜி பின் தென்னாட்டு மறவர் சேனை அணிதிரள வழிவகுத்தது
வடுகநாதர் கொல்லபட்டு 200 ஆண்டுகாலம் கூட வெள்ளையன் ஆளவில்லை, நாடு போராட்ட தீயில் அவனை விரட்டியது
அந்த தீக்கு விறகாய் இருந்தது தென்னாட்டு மறவர் பூமி, முத்துவடுகநாதனின் பூமி
அந்த மாவீரனுக்கு இன்று பிறந்த நாள், அவன் சிலை இப்பொழுதும் காளையார் கோவிலில் உண்டு
இவரின் வாழ்வு மூன்று இரு சக்திகளுக்கு எதிராக இருந்தது, ஆம் மொகலாயர் மற்றும் பிரிட்டிசார் ஆகிய மூன்று இனங்களை தமிழ்நாட்டில் எதிர்த்த முதல் நபர் அவர்தான். அதே நேரம் தஞ்சைக்கு வந்த மராட்டியருடனும் உரசல் இருந்தது.
விடுதலை வீரனாக அல்ல, ஒரு நல்ல இந்து அரசனாக முத்துவடுகநாதர் செய்த சேவை கொஞ்சமல்ல.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரிடமும், காளையார் கோவில் காளைநாதரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார் அவர், மதுரையினை அவர் காத்ததே அந்த மீனாட்சி அம்மன் ஆலயத்துக்காக‌
தேவாரப் பதிகம் பெற்றதும், பாண்டியரது திருப்பணியுமான காளையார் கோவிலின் நுழைவு வாயிலில் மிகப் பிரம்மாண்டமான கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்தார்.
மிக பெரும் சிவனடியார் ஆதரவாளராக நின்று அடியார்களை காத்தார், இதனால் ஏகபட்ட மடங்களுக்கு உதவினார்.
சிவகங்கை பண்டார மடம், காளையார் கோவில் மிளகாய்த் தம்புரான் மடம், ஊத்துமலை மடம், திருவாவடுதுறை பண்டார மடம், தருமபுரம் மடம், திருப்பனந்தாள் மடம், சிருங்கேரி மடம், சதுரகிரி குளந்தை பண்டார மடம் ஆகிய அமைப்புகளின் பீடாதிபதிகள் வைத்த கல்வெட்டுக்களே இன்றும் சாட்சி
எல்லை தாண்டி கன்னட தேசத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு வடுகநாதர் திருப்புவனம் வட்டத்தில் கருங்காலகுடி, தவத்தார் ஏந்தல் என்ற இரு ஊர்களை சர்வமான்யமாக வழங்கி இருக்கின்றார் என்றால் அவரின் பக்தியினை உணர்ந்து கொள்ளலாம்
காசியின் கங்கைக் கரையில் தமது பாட்டனார் நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது நினைவாக ஒரு மடம் ஒன்று அமையவும் அதில் முறையாக மகேசுவர பூஜை நடைபெறவும் வல்லக்குளம் என்ற கிராமத்தை அந்த தர்மத்திற்கு ஈடாக தருமபுரம் ஆதினகர்த்தருக்கு வழங்கி இருந்தார் வடுகநாதர்
தமிழையும் சமயத்தையும் வளர்த்தவர்கள் இந்த மடாதிபதிகள், அந்த மடாதிபதிகளுக்கு காவலாய் நின்றார் வடுகநாதர்
1750 முதல் 1771 வரை அவர் செய்த திருபணிகள் ஏராளம், கல்வெட்டும் செப்பேடும் அதற்கு சாட்சியாய் நிற்கின்றன, ஆதீனங்களும் மடங்களும் அவன் புகழை தாங்கி நிற்கின்றது
சைவ மத காவலனாய், தமிழர் பூமி மறவனாய், அந்நியருக்கு அடங்காமல் வெற்றிகொடி ஏந்தி நின்ற வீரனுமாய், சைவம் காத்த, மடம் காத்த, அடியார்க்கு அடியாராய் நின்ற அந்த முத்துவடுக நாதனுக்கு இன்று பிறந்த நாள்
அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அவன் நினைவை சுமந்தபடி மடங்களும் ஆதீனங்களும் அந்த காளையார் கோவில் கோபுரமும் நின்று கொண்டிருக்கின்றன, அவை இருக்குமளவு அவனும் வாழ்வான்
காளையார் கோவில் என்பது வெறும் ஆலயமல்ல, ஏகபட்ட பெருமைகளின், தியாகங்களின் வரலாற்று சாட்சி, அதில் உயர தெரிகின்றான் முத்துவடுகநாதன்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக