பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், செப்டம்பர் 5

கொழுப்பெடுத்தவர்களுக்கு மட்டும் !
இந்த பதிவு கொழுப்பெடுத்து திரியும் அனைவருக்கும் மட்டும். கொழுப்பு இல்லாதவர்கள் எல்லோரும் விலகி நில்லுங்கள். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கிக்கொண்டு அடிக்க வராதீர்கள் மக்களே! நான் சொல்லவந்தது  "கொலாஷ்ட்ரால்" எகிறிப்போய் உடலில் கண்ட இடங்களில் சதை தொங்க நடக்க முடியாமல் மூச்சு முட்டி , தினமும் கொழுப்பு கரைக்க மாத்திரை போட்டுகொள்ளும் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு.

இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து குழாய்களின் விட்டம் அதனால் குறைந்து போய் இரத்த அழுத்தம் உயர்வது வயதின் காரணமாக பெரும்பாலோருக்கும் வாய்த்த ஒன்றுதான். இரத்தில்  கொலாஷ்ட்ரால் அளவு உயராமல் இருந்தும் இரத்த அழுத்தம் உயர்ந்து காணப்படுவதும் பொதுவான ஒன்றாகி விட்டது. நாற்பது வயதுக்கு மேல் இந்திய ஆண்கள் அனைவருக்கும் தொப்பை சரிந்து அவர்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது என்பது நம் அனைவரின் ஜீனில் உள்ளது என்று மருத்துவ ஆய்வறிக்கைகள் சொல்வது.

அதிலும் இந்த வயது கார்கள் தங்களின் ஷர்ட்டை டக் இன் பன்னி விட்டு வரும்போது பார்த்தல் ஐயோ பாவம் என்றுதான் இருக்கும். வேட்டியும் சட்டையும் அணிந்தாலோ எண்ணெய் பேரலுக்கு துணி சுற்றியது போலத்தான் இருப்பார்கள். அதிலும்  தண்ணி வண்டி ஒட்டுபர்களாக இருந்தால் மகா கண்டராவிதான்.  சண்டைக்கு வராதீர்கள் சாமிகளா.......!

அதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். அதிகப்படியான உடல் எடை குறைய வேண்டுமா, இடுப்பு  எம். ஆர். எப் . டயர் சைசில் அகண்டு பருத்துப்போய் விட்டதா, கொலஸ்ட்ரால்  அதிகம் உள்ளதா, இரத்த அழுத்தம் அதிகம் உள்ளதா?????? தினமும் மாத்திரை போடும் கேசா ? நானும் இந்த கேசுதான். கவலையை விடுங்கள்.

மிக மிக மிக மிக எளிமையான, எல்லோருக்கும் தெரிந்த, மிக மிக மலிவான வழிமுறைகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதனை உணர்ந்து கொண்டதில்லை. இரத்த அழுத்தம் எகிறிப்போய் அதனால் தினமும் மாத்திரைகள் போட்டாக  வேண்டும் என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. உணவில் நிறைய  மாற்றங்கள், உப்பே சுத்தமாக விளக்குவது அல்லது சிறிதளவே சேர்த்துக்கொள்வது, எண்ணை,நெய் வகைகளை தூரம் வைப்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த இரத்த அழுத்தம் இவைகள் எதையும் லட்சியம் பண்ணாமல் தன் பாட்டுக்கு எழும்பி உயர்ந்தே நிற்பது வழக்கம்.

இங்கு என்னை சோதித்த ஒரு மும்பை கார டாக்டர் ஒருவர் மாத்திரைகள் எழுதினார் கூடவே ஒரு ஆலோசனையும் சொன்னார். அதோடு இல்லாமல் இங்குள்ள நண்பரும் ஒரு அறிவுரை சொன்னார். இவர்கள் இருவரும் சொன்னது மிக சாதாரண ஒன்றுதான். ஆனால் அதனால் உண்டான பலன்களோ என்னை வியப்படைய வைத்த ஒன்று.

அந்த மும்பை கார டாக்டர் சொன்னது தினமும் ஒரு பல் பூண்டை தின்னவேண்டும். நண்பர் சொன்னது தினமும் காலையில் ஒரு பல் பூண்டை  நெருப்பில் வாட்டி, தோலை உரித்து விட்டு அப்படியே தின்ன வேண்டும். காலையில் சுட்ட பூண்டை தின்று விட்டு வேலைக்கு போனால் எல்லோரும் நம்மை விட்டு ஓடி ஒளிவார்கள் இது சரிவராது என்று நானும் இருந்துவிட்டேன். சில தினங்களுக்கு முன்னர் இரவில் சமையலுக்கு என்று இருந்த வெங்காயங்களை எடுக்கும் போது வாங்கி வைத்த பூண்டும் அப்படியே பயன் படுத்தாமல் இருப்பதை நினைத்து ஒரு முழு பூண்டையும் எடுத்துக்கொண்டேன். வெங்காயத்தை நீரில் இட்டு பின்னர் வெட்டினாலோ அல்லது பிரிட்ஜில் வைத்து பின்னர் வெட்டினாலோ அழத்தேவை இல்லை என்று தெரியும்தானே!

வெங்காயத்துடன் அந்த பூண்டையும் குளிர்ந்த நீரில் இட்டு மற்ற வேலைகளை கவனித்தேன். வெங்காயம் வெட்டும் நேரம் வந்த போது பூண்டும் " என்னைப்பார் , என் அழகைப்பார் " என்று என்னை மோகிக்க , வந்தது வரட்டும் என்ற வீராப்பில் பூண்டை தோலுரித்து ஏழு எட்டு பற்களாக எதிரில் வைத்துக்கொண்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்த தண்ணீரும், கொக்க கோல குளிர் பானமும் தயாராக இருக்க முதலில் ஒரு பல் பூண்டை எடுத்து (பச்சையாகதான் ) வாயில் போட்டு கரகரவென கடைவாய் பகுதியால் மென்று உள்ளே தள்ளிவிட்டேன். உடனே இன்னுமொரு பல்...... அதனை முழுசாக மென்று உள்ளே தள்ளும் முன்னரே வாயில் நெருப்பை வைத்த உணர்வில்  "ஆ"வென கத்தி விட்டேன். கண்கள் நீரை கொட்ட, இரண்டுகாதுகளில் வழியே 'புஷ்'என ஏதோ வேகமாக வெளியேறும் உணர்வும் வர, தலை மயிரை இரண்டு கைகளாலும் பிய்த்துக்கொண்டு .......தயாராய் எடுத்து வைத்த கொக்க கோலாவை வாய் நிறைய ஊற்றிக்கொண்டு அதன் இனிப்பில் ஜில்லுபில் ........ அட இதெல்லாம் சில விநாடிகள்தான்...... சடசடவென பூண்டின் காரம் குறைத்து ஒரு சுகமான இளம் காரம் மட்டும் வாயில் நிற்க, மூன்று பல் பூண்டினை தின்று தீர்த்த வீர உணர்வுடன் கண்ணாடியில் என் முகம் பார்க்க எனக்கே சகிக்கவில்லை. இவையெல்லாம் சில நொடிகள் தான். பின்னர் வழக்கம் போல சாப்பாட்டுக்கான ஏற்பாடுகள்.

வழக்கமாக  மிளகாய் காரம் , இட்லிக்கு பூண்டு மிளகாய் பொடி என்றாலே காரம்  ஆகாத எனக்கு பச்சை பச்சை பூண்டை தின்ன இச்சை வந்ததே வினோதம். இதே கதை தான் தினமும் இரவு வேலைகளில். சிலதினங்களில் மாற்றங்கள் தெளிவாக எனக்கு தெரிய ஆரம்பிக்க ஒரு வேலை பச்சை பூண்டின் வேலைகல்தானோ என்று நான் நோட்டம் விட, உடன் இருந்த நண்பர்கள் வழக்கம் போல உசுப்பேற்றி வாரி விடுவார்களே அதே தொனியில் என் உடல் இளைதுபோனதாக சொல்ல, எடை மெஷினில் ஏறி நின்று என் எடை பார்த்தபோது ஆச்சர்யம் ஐந்தே  நாட்களில் சுமார் இரண்டு கிலோ எடை குறைந்து போனது உண்மை. பேன்ட் இடுப்பின் அளவும் சற்று தளர்ந்து வர , எனக்கு வியப்பாக இருந்தது. 160 இல் இருந்த இரத்த அழுத்தமும் அழகாக குறைந்து 145 என காட்ட, டாக்டரும் வியப்புடன் புருவத்தை சுருக்கி கேட்க, நானும் விபரத்தை சொன்னேன். அவர் ஆமோதித்தாலும் வழக்கமாக எடுத்துக்கொளும் மாத்திரைகளை விட்டு விடாமல் தொடரவேண்டும் என்று அறிவுரை சொன்னார். பேண்டை டக் இன் பன்னி விட்டு பார்த்தல் பிதுங்கி தள்ளிய தொப்பையும் உள்ளடங்கி போனது மகிழ்ச்சியாக இருந்தது.எடை குறைந்ததால் மாடிப்படிகளில் ஓடும் உற்சாகம் வந்து விட்டது. முன்பெல்லாம் படிகள் ஏறினாலே சிரமமாக இருக்கும்.

பூண்டினை சமைத்து சாப்பிடுவதை விட சமைக்காமல் சாப்பிடுவதால் மட்டுமே அபரிமிதமான பலன் கிடைப்பதாக நெட்டில் இருக்கும் அணைத்து
 " பூண்டு விரும்பிகளும் "  துண்டை  போட்டு தாண்டாத குறையாக பக்கம் பக்கமாக பூண்டின் அருமை பெருமைகளை பட்டியலிடுகின்றனர் என்பதும் உண்மைதான்.  தினமும் இரவு வேளைகளில் ஒரு சில பற்கள் பூண்டினை தின்னுங்கள். உடல் எடை குறையும், இரத்த அழுத்தம் குறையும், இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு கரைந்து விடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சளி  தொல்லைகள் வரவே வராது.பூண்டில் இருக்கும் அபரிமிதமான Anti oxidant நிறைய நமக்கு உதவுகிறது.
தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் வேண்டாம் என்று எச்சரிக்கை இடுகின்றனர். அதிகபடியான பூண்டினை உட்கொள்வதால் நம்மிடமிருந்து வெளியேறும் வியர்வையில் பூண்டின் மனம் இருக்கும் எனவே கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்துகின்றனர். எல்லோரும் இனி பூண்டை பச்சையாக தின்னுவோம்,ஆரோக்கியம் பேணுவோம்.

போகிற போக்கில் "பச்சையாக பூண்டை தின்னுவோர் சங்கம் " கூட ஆரம்பிக்கலாம் நம்ம பன்னி குட்டியின் தலைமையில்.


13 comments:

துளசி கோபால் சொன்னது…

அட! தொப்பை குறையுதா!!!செஞ்சு பார்த்துருவோம் கோபாலுக்கு:-)

Ramani S சொன்னது…

பயனுள்ள விஷயத்தை இப்படி
சுவாரஸ்யமாகச் சொல்ல எத்தனை பேரால் முடிகிறது ?
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்பாடா நமக்கு அந்த பிரச்சினையே இல்லை, மிகவும் பயனுள்ள ரசிக்கும் படியான பதிவு அண்ணே நன்றி....!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ரைட்டு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆரோக்கியம் பேண
அருமையான
சுவையான (!)
மணமான் (!!)
குறிப்புகள்..

பாராட்டுக்கள்....!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// "பச்சையாக பூண்டை தின்னுவோர் சங்கம் " //

Asian or Nerolac or Berger or Shalimar ?

சேக்காளி சொன்னது…

//எடை குறைந்ததால் மாடிப்படிகளில் ஓடும் உற்சாகம் வந்து விட்டது//
இதெல்லாம் அதிகமா(ஓவரா) தெரியலையா
//பூண்டின் மனம் இருக்கும்//
மணம்
வேற காத்து (கருப்பு) பிரச்னை ஏதும் இருக்கா?

ராஜி சொன்னது…

முயற்சி செய்து பார்க்கலாம்ன்னு இருக்கேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//அட! தொப்பை குறையுதா!!!செஞ்சு பார்த்துருவோம் கோபாலுக்கு//
துளசியக்கா! என்ன? எதையுமே அத்தானில் தான் பரீட்சிப்பீர்களா?

நாம் உள்ளியின்றிச் சமைப்பதேயில்லை. எனினும் உங்கள் அனுபவதைப் பின்பற்ற உத்தேசம்.

S.Menaga சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!!

சக்கர கட்டி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

ABUBAKKAR K M சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
பூண்டு தினமும் சாப்பிடுவதால் புற்று நோய் பாதிப்பும் வராது.
<><> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடக்குறிச்சி

Gujaal சொன்னது…

தேன் உடன் சேர்த்து உண்டால் காரம் தெரியாது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக