பகிர்ந்து கொண்டவர்கள்!

சனி, பிப்ரவரி 13

ஜெயந்தன்

 ஜெயந்தனை படியுங்கள்.
சுரேஷ் கண்ணனின் பிச்சை பாத்திரம் ப்ளாக் படித்தபோதுதான் ஜெயந்தன் அவர்கள் காலமாகி விட்டார் என்ற  செய்தி கண்டு அதிர்ந்தேன். எனைவிட வயதில் மூத்தவர் என்றாலும் என்னிடமும் என் மூத்த சகோதரரிடமும் அவர் கொண்ட நட்பு மறக்க இயலாதது. மிக சாதாரணமாக பேசி பழகுவார். 1982 ஆம் வருடம் என்று நினைவு, அவர் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை கிராமத்தில் பிராணிகள் நல மருத்துவராக (Veterinary Doctor)  பணியாற்ற வந்தார்.


 அந்த மருத்துவ மனையும், கிளை நூலகமும் அடுத்தடுத்து அமைந்தவைகள்.அருகில் ஒரு குளம் தாமரைகள் நிறைந்து நிழலும் குளிர்ந்த காற்றுமாக ரம்மியமாக இருக்கும். மாலை நேரம் மற்றும் வார இறுதிநாட்களில் நூலகம் செல்லும்  போது இவரின் அறிமுகம் கிடைத்தது. ஆனால் இவர்தான் ஜெயந்தன் என்று தெரியாது. அதற்கு முன்னரே அவர் குமுதம் இதழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து,எனக்கு  பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் வந்துவிட்டவர்.என்கையில் இருந்த தி .ஜானகிராமனின் "மரப்பசு " நாவலை பார்த்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தவர்தான் அதற்க்கு பிறகு என் அண்ணனுக்கும் பழக்கமாகி ....அதெல்லாம் ஒரு இனிய தொடர் நாட்கள். ஒரு முறை அண்ணன் எங்கள் வீட்டுக்கு அவரை  சாப்பிட அழைத்துக்கொண்டு வந்ததும் நாங்கள் அணைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதும் நினைவு வருகிறது.
டிசம்பர்மாத புத்தக கண்காட்சிகளில் அவர் குறிப்பிடும் தலைப்புகளை வங்கி வருவதும் , அவைகளை படித்து விட்டு அவருடன் உரையாடுவதும் சுகமான ஒன்று. அவரின் தொகுப்புகளை படித்து விட்டு மலைத்துப்போய் 

" எப்படி சார் இப்படி அடித்துப்போடுவது மாதிரி எழுத வருகிறது ?" என்றால் மெல்லிய புன்முறுவல் தான் பதிலாக வரும். 

சரியாக நினைவில்லை "மன வெளி மனிதர்கள் " என்று நினைக்கின்றேன் அந்த நாவல் பிரதி ஒன்றை என்னிடம் தந்த போது அதில் அவரின் கையெழுத்தை பெற்றுக்கொண்டேன். படித்த கதைகளை பற்றி என்னிடம் கேட்பார். சில இடங்ககளில் அவர் விளக்கமும் தருவார். 

காலம் சகலத்தையும் மாற்றி போட்டது எல்லாரும் எங்கெங்கோ தூக்கி எறியப்பட்டோம். பல வருடங்களாக என் தொகுப்பில் அந்த புத்தகம் இருந்தது . பல முறை படித்து அனுபவித்த ஒன்று. நான் தொகுத்த வைத்தவைகள் பின்னாளில் வாடகை வீடு மாறும் அலங்கோலத்தில் தொலைந்து போய்விட்டது வேதனை.

ஜெயந்தனுக்கு தமிழ் எழுத்துலகில் உரிய இடமும் மரியாதையும் கொடுக்கப்படவில்லை என்பது வருத்தமானது..

அவரின் எழுத்துகளை  அணைவரும் படிக்க வேண்டும் என்று எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

அண்ணாமலையான் சொன்னது…

ஆமாங்க,, அவசியம் படிக்கனும்

Mrs.Menagasathia சொன்னது…

ஜெயந்தனுக்கு என் அஞ்சலி....

செந்தழல் ரவி சொன்னது…

அமரர் ஆனபிறகு கொண்டாடுவார்கள். இருக்கும்வரை சீந்தமாட்டார்கள். அது தமிழ்கூறும் நல்லுலகின் தலைவிதி.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக