பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, மே 15

அவர் ஒரு சாதாரண அலுவலக ஊழியர்....

Stanley Rajan

அவர் ஒரு சாதாரண அலுவலக ஊழியர் , பெரிய படிப்போ பட்டமோ ஏதுமில்லை. அவரின் தமிழும் எழுத்தும் அவரை சினிமாவுக்கு இழுத்து வந்தது
அங்கும் கொத்தமங்கலம் சுப்பு, திருவாரூர் தங்கராசு போல கதாசிரியர் அல்லது வசனகர்த்தாகாவோ வாழ்ந்து முடித்திருக்க வேண்டியர்தான், அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்
ஆனால் அவரின் நல்விதி அவரை யார் என புரிய வைத்தது, அந்த திருவண்ணாமலை பூமியும் அந்த விசிறி சாமி எனும் அவதாரமும் அவருக்கு உண்மை உணர்த்திற்று.
ஆன்மீகத்தில் அவரின் மனம் கலந்தது. பழைய தமிழ் சித்தர்களில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டார். சித்தராக வாழ்ந்தார், சித்தராக சிந்தித்தார், சித்தராக எழுதினார், சித்தராகவே முடிந்தார்
"எழுத்து சித்தர்" பாலகுமாரன்
த்மிழக எழுத்தாளர் வரிசையில் தனி இடம் பிடித்தவர் பாலகுமாரன், சோழநாட்டு கம்பனின் தமிழ் அவருக்கு அனாசயமாய் வந்தது
எழுத்துலகில் ஒருவித ரசனையான எழுத்தினை காட்டினார், அவரின் எழுத்தெல்லாம் தத்துவம், ஆன்மீகம், அன்பு, சமத்துவம், வரலாறு என எல்லாம் தாங்கி கதம்பமாய் வந்தன‌ம் தாங்கியே வந்தன‌
கிட்டதட்ட 270 நாவல்களும், 200க்கும் மேற்பட்ட கதைகளும் எழுதியிருப்பார். நாவல்களில் தனி முத்திரை பதித்துவிட்டு சினிமா உலகிற்கும் வந்தார்
சுஜாதா போலவே பாலகுமாரனின் வசனங்களும் காலத்தினை வென்றவை
'நாயகன்' 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்; என எழுதி குவித்தார், அற்புதமான வசனங்கள்
இது நம்ம ஆளு படத்தின் அற்புதமான இயக்குநரும் அவரே, இன்னும் ஏராளம்
உறுதியாக சொல்லலாம் அவருக்கு நாவல் எழுதும் அவசியமே அவருக்கு இல்லை, ஒரு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி என்றால் ஒரு வசனகர்த்தா கதாசிரியரால் தனக்கு இத்தனை கோடி என எளிதாக கணக்கிட முடியும்
அதுவும் பாலகுமாரனால் பல கோடிகளை கோர முடியும், நிச்சயம் சாதாரண எழுத்தாளனென்றால் அதைத்தான் செய்திருப்பான்
ஆனால் பாலகுமாரனின் மனம் ஒரு கட்டத்தில் பணத்தில் நிறைவுற்றது, பணம் தன் வாழ்க்கையின் நோக்கத்துக்கு சுதர்மத்துக்கு தடை போடும் என உணர்ந்து சினிமாவினை சட்டென உதறினார்
இது புத்தன் அரண்மனைவிட்டு ஓடிய நிகழ்ச்சியினை போல தத்துவமிக்கது, பட்டினத்தார் சித்தி அடைய கிளம்பியது போன்றது
அப்படி அதன் பின் ஞானமும் வரலாறும் ஆன்மீகமும் எழுதி அசத்தினார், மிக பெரிய தெளிவும் தத்துவம் போதனையும் அவர் எழுத்தில் மிகுந்திருந்தன.
மனிதரிடம் கடைசி வரை அகங்காரமோ, ஆர்பாட்டமோ , கர்வமோ, எழுத்து சிம்மாசத்தின் உச்சியில் இருக்கின்றோம் எனும் மமதையும் கொஞ்சமுமில்லை
அவர் எல்லோருக்கும் நண்பனாய் இருந்தார், கொடிய எதிரியும் அவரை பழித்துவிட முடியாது. பழித்தோரும் பின்னாளில் அவரிடமே சரணடைந்தனர்.
அதுதான் ஒரு துறவியின் மனம், அதில் சரியாக இருந்தார் பாலகுமாரன்
மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு, சும்மா அர்ஜூனனை போருக்கு அழைத்து செல்வான் கண்ணன், ஏகபட்ட போர்கள் நடந்தன. அர்ஜூனனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, சலிப்புற்றான். ஆயினும் சொல்வது கண்ணன் என்பதால் போரிட்டான்
அந்த போர்களின் அனுபவமே குருஷேத்திரம் எனும் கொடும்போரில் அர்ஜூனனுக்கு கை கொடுத்தது, அப்பொழுதுதான் அர்ஜூனனுக்கு புரிந்தது , "கண்ணன் நம்மை தயார்படுத்தியிருகின்றான்"
அப்படி தன் 270க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏகபட்ட சினிமா வசனங்கள், 200க்கும் மேற்பட்ட கதைகளெல்லாம் தான் அவதரித்த மிகபெரிய நோக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்தார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கொட்டி அவர் எழுதியதுதான் "கங்கை கொண்ட சோழபுரம்" மற்றும் என்றும் தமிழ் உலகில் கோபுரமாக இன்னும் அந்த "உடையார்".
இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல். தஞ்சை கோவிலுக்கு அதை விட இன்னொருவன் காணிக்கை வைத்துவிட முடியாது
காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே
முன்னோர்களின் ஏதோ நினைவு அல்லது பூர்வ ஜென்ம‌ தொடர்ச்சி அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்.
இந்துமதத்தின் சித்தர்களின் சாயலாகவும் அவர் அறியபட்டார், கண்ணதாசனின் இறுதிகாலம் போலவே பாலகுமாரனுக்கும் ஆன்மீக ஞானம் உச்சத்தில் இருந்தது
இன்று அவரின் நினைவுநாள்
எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது
அந்த மெல்லிய பூங்காற்றில் ஆலயமணி போன்ற ஆன்மீகமும் சோழனின் வாள் சத்தமும், உளி சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது ஒருவித சுகம்
எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டருக்கின்றனர்
ஆனந்த விகடனும், குமுதமும் அவருக்காகவே விற்பனையான காலங்களும் உண்டு
எழுத்து சித்தர் இனி இல்லை, ஆனால் அவரின் எழுத்துக்களில் எந்நாளும் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்
மணிரத்னம் படத்தின் ஆரம்ப கால வசனங்கள் அவருடையது, சுருங்க சொல்லி அசத்தியிருப்பார்
ஜீன்ஸ் படத்தில் அற்புதமான வசனம் ஒன்று எழுதியிருப்பார்
உதவாக்கரை நாசர் அழும்பொழுது அவர் அண்ணன் சொல்வார்
"நாச்சியப்பா நீ என் தம்பிடா, நீ எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்ல, ஆனா நீ கண்கலங்கினால் மட்டும் அண்ணனால் தாங்க முடியாது"
பாசம் என்பது பணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை அட்டகாசமாய் சொன்ன வசனம் அது.
நாயகன் படத்தில் பிள்ளைகளின் மேல் பாசம் கொண்ட அந்த ரவுடி தந்தை அவர்களை பிரியும் பொழுது மனைவி கேட்பார் "பிள்ளையள விட்டுட்டு நீங்க எப்படி இருப்பீக‌?"
"நானா முக்கியம்டி? அதுக நல்லாயிருக்கணும், என் பாதிப்பு இல்லாம இருக்கணும், அப்பதான் உருப்படும்"
இது ரவுடி தந்தைக்கான வசனம் என்றா கருதுகின்றீர்கள்? உண்மையில் எழுத்தாளன், கவிஞன் போன்ற தந்தைகளுக்கும் பொருந்தும்
அது பாலகுமாரனின் மனமாகவும் இருக்கலாம். ஒரே வசனத்தில் எல்லோர் மனதையும் அவர் தொட்டது இப்படித்தான்.‌
இனி இப்படி எல்லாம் எழுத யார் இருக்கின்றார்கள்? அவரின் வசனங்கள் எல்லாம் காதில் ஒலிக்க தொடங்கிவிட்டது
அவர் எழுத்தில் தமிழின் இனிமையும், ஞானமும் கலந்திருந்தது, ஆன்மீகம் மிதந்து வந்தது, சித்தர்களின் அன்பும் தத்துவ வாசனையும் மணமாய் வந்தது



ஞானம் கலந்த எழுத்து என்பதை அவர் நிரம்ப கொடுத்தார், ஆன்மீகம் கலந்த எழுத்து எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதை அவர் காட்டினார்.
அவர் எழுத்து நதியின் அணைகட்டு, நாமெல்லாம் பயனுற்றோம். அவர் கைகாட்டினார் நாம் வழிகண்டோம், அவர் படிக்கல்லாய் அமர்ந்தார், நாமெல்லாம் நல்வழி ஏறி சென்றோம்
அவர் மழையாய் பொழிந்தார் நாம் மனநிலமெல்லாம் செழுமை அடைந்தது
உயர்ந்த ஞானமிக்கோர் எல்லாம் ஒரே வரிசையே
அதில் வசிஷ்டர் முதல் அகத்தியர் போன்ற சித்தர்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட சித்தர் பாலகுமாரன்.
அவர் எவ்வளவு சாதித்தார் என்பதையும், அவரின் மிகபெரும் இடம் என்ன என்பதையும் உலகுக்கு சொல்லவே அவருக்கு மரணம் சம்பவித்தது.
வாழ்நாளில் அவரை யோசிக்காதவர்கள் கூட அவர் இல்லா காலத்தில் அவரின் அருமை அறிந்து யோசிக்கின்றார்கள், அவர் செய்ததை நாமும் செய்யவேண்டும் என பலர் சிந்திக்கின்றார்கள்
அவர் இந்து, இம்மண்ணின் தாத்பரிய நம்பிக்கை படி அதிதீவிர இந்து, ஆனால் இந்துநெறி உண்டே தவிர இந்துவெறி இல்லை
இதனால் எல்லா மதத்திலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள், அவர் பிராமண சமூகமெனினும் அவரின் அந்த மகா உயர்ந்த அணுகுமுறையால் எல்லா சாதியினரும் அவரை கொண்டாடினார்கள்.
மழைபோல் எல்லோருக்கும் பொதுவான பிடித்தமான எழுத்தளராய் விளங்கினார், அதுதான் அவரின் முத்தாய்ப்ப்பு.
குருடனுக்கு கிடைத்த கோலாக அவரின் எழுத்துக்கள் எத்தனையோ பேருக்கு வழிகாட்டுகின்றன‌
தசரதன் இறந்ததை கம்பன் இப்படி புலம்புவான்
"நந்தா விளக்கணைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனிஅறத்தின் தாயே தயாநிதியே
எந்தாய் இகல்வேந்தர் ஏறே இறந்தனையோ
அந்தோ இனிவாய்மைக்கு காருளரோ மாற்றுலகில்"
இது பாலகுமாரனுக்கும் அப்படியே பொருந்தும்
அவருக்காக நாம் அழவேண்டியதில்லை, அவர் காலத்தில் வாழ்ந்ததற்காக பெருமை படல் வேண்டும்.
அவரின் பேனா முனையில் இருந்து இன்னும் பல உன்னத‌ உயிர்த்தெழுவார்கள் அவர்கள் அவர் விட்டுசென்ற பணியினை தொடர்வார்கள், அந்த பாலகுமாரனின் ஆன்மாவும் அது கலந்த திருவன்ணாமலை கோவிலும் அதற்கு வழிகாட்டும்
தமிழகம் கண்ட தனிபெரும் சித்தனுக்கு அஞ்சலிகள், தஞ்சை கோவில் உள்ள அளவும் அவரும் ஒரு கோவிலாய் நிலைத்திருப்பார்..

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக