பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, ஜனவரி 10

மீண்டும் ஒரு பாலகுமாரன்

Stanley Rajan
வரலாறு எப்பொழுதும் எங்கும் ஒரு சாட்சியினை மவுனமாக நிறுத்தியிருக்கும், நடந்த கொடுமைக்கும் புரட்டுக்கும் அது சாட்சியாக நின்றுகொண்டிருக்கும், உரிய வேளை வரும்பொழுது அது தன் மவுனத்தை கலைத்து வரலாற்றை மிக சரியாக சொல்லும்
அப்படி ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட்.
அங்கோர் வார் எனும் கெமர் மொழியில் "கோவில்களின் நகரம்" என பொருள்
இன்று கம்போடியா என அழைக்கபடும் நாடு அன்று காம்போஜம் என்றிருந்தது, இந்தோ சீன நாடுகளுக்கே உரிய வளமான ஆறுகள் அங்கு பெருக்கெடுத்தன, அதனால் விவசாயம் செழித்தது
இங்கு பல்லவ மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது 7ம் நூற்றாண்டில் அங்கு படையெடுத்து கைபற்றினான், ஆம் சோழருக்கு முன்பே கிழக்காசியாவினை பல்லவனே ஆண்டான், சோழன் அவனுக்கு பின் 300 ஆண்டுகள் கழித்தே அப்பக்கம் வந்தான். பல்லவரின் கப்பல்படை அப்படியானது
அந்த பல்லவனுக்கு வாரிசு சண்டை வந்தது, அக்கால வழக்கபடி வாரிசுகள் மோதாமல் இருக்க நாட்டின் இன்னொரு பகுதிக்கு சர்ச்சை வாரிசினை அனுப்புவார்கள், அங்கே இருந்து நாட்டை கவனிப்பது அண்டை நாட்டை அபகரித்து பெருக்குவது அப்படியே நாட்டை பிரித்து முடிசூடுவது என ஏக அரசியல் உண்டு
அதற்காக முக அழகிரி மதுரைக்கு அனுப்பட்டது கனிமொழி டெல்லிக்கு அனுப்பபட்டது பற்றி எல்லாம் நீங்கள் சிந்திக்க கூடாது, விஷயம் அங்கோர் வாட்
அப்படி காஞ்சி பல்லவ மன்னன் 8ம் நூற்றாண்டில் தன் மகனை காம்போஜத்துக்கு அனுப்பினான், இனி இதுவே தன் தேசம் என உணர்ந்த அந்த சூரிய வர்மன் தான் ஒரு இந்து மன்னன் என்பதாலும் வெளிநாட்டில் இந்துமதம் பிரமாண்டமாக பரவ வேண்டும் என்பதாலும் அந்த மாபெரும் ஆலயத்தை அமைத்தான்
ஆம், அன்றும் இன்றும் அதுதான் உலகின் மாபெரும் இந்து ஆலயம், அட எல்லா மத ஆலயத்திலும் அதுதான் பெரிது
அதன் பரப்பளவு 700 ஏக்கர், ஒரு பக்க சுவர் 5 கிமீட்டருக்கும் நீளம் கொண்டது, உள்ளிருக்கும் ஆலயத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?
திருச்சி திருவரங்கம் போல 30 ஆலயங்களை உள்ளே வைக்கலாம் என்றால் நீங்களே முடிவு செய்யுங்கள்
ஆம் அப்படி பெரும் சீரும் சிறப்புமான அந்த ஆலயம் கிழக்காசியாவில் இந்து பெருமையினை தாங்கி நின்றது, அதன் மொத்த பரப்பளவையும் படம்பிடிக்க நீங்கள் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பிரமாண்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்
இந்தியாவில் எந்த ஆலயமும் அதன் அருகே கூட வரமுடியாது , ஏணி வைத்தாலும் எட்டமுடியாது
இன்று கட்ட ஆரம்பித்தாலும் அந்த ஆலயம் கட்டபட 300 ஆண்டுகள் ஆகுமென்றால் அதன் பிரமாண்டத்தை சொல்ல வார்த்தை ஏது?
மூன்று அடுக்குகள் கொண்டது அது முதல் அடுக்கு வளாக சுவர்
இரண்டாம் அடுக்கு சுவரில் ராமாயண மகாபாரத காட்சிகள் செதுக்கபட்டிருக்கின்றன‌
மூன்றாம் உள் அடுக்கில்தான் பிரமாண்டமான ஆலயம் அமைந்திருக்கின்றது
இன்று சுற்றினாலும் முழுக்க சுற்ற ஒருவாரம் ஆகுமென்றால் இனி சொல்ல என்ன இருக்கின்றது
எப்படி அமைந்தது அங்கோர் வாட்?
காஞ்சி பல்லவர்கள் திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்கள் என்கின்றது வரலாறு, அப்படி இந்த கம்போடிய ஆலயத்தை விஷ்ணுவுக்கு அர்பணித்தான் சூரியவர்மன்
அவன் எப்படி கட்டினான் , எங்கிருந்து மக்களை கொண்டு சென்றான், எத்தனை ஆயிரம் சிற்பிகள்,கட்டுமான விற்பனர்கள் உழைத்தார்கள் என்பதெல்லாம் பற்றி தகவலே இல்லை
பூலோக வைகுண்டமாக மின்னிகொண்டிருந்தது அந்த வைணவ தலம்
எல்லா சாம்ராஜ்யத்துக்கும் வரும் சோதனை பல்லவ இனத்துக்கும் வந்தது, ஆம் பல்லவ இனம் புத்த மதத்தை கொஞ்ச நாள் சுமந்தது
புத்தத்தை தழுவிய எந்த அரசும் நிலைக்காது, காரணம் அது அரசனுக்கு ஒத்துவராத மதம். உதாரணத்துக்கு இந்திய ராணுவ தளபதியும், தமிழிக டிஜிபியும் அஹிம்சையே வழி, உயிர்களை துன்புறுத்த கூடாது, ஆயுதம் கூடாது, சண்டை கூடாது என்றால் நாடு நாடாக இருக்கும்?
அப்படி புத்தமதத்துக்கு மாறிய பல்லவ அரசு நிலைக்கவில்லை, இங்கு சரிந்தது
இங்கு சரிந்ததும் கம்போடிய பல்லவ அரசுக்கும் பிடியில்லாமல் தத்தளித்தது, அப்பொழுது உதித்த ஜெயவர்மன் எனும் வாரிசு அந்த கோவிலை புத்த கோவிலாக மாற்றியது
பின்பு இங்கு சோழ வம்சம் ஆட்சிக்கு வந்து அசத்தியது, சோழன் சைவ பிரிவு என்பதால் அவன் சைவ ஆலயங்களுக்கே முன்னுரிமை கொடுத்தான், கடாரம் கைபற்றி அதற்கங்கு கம்போடியா வரை சோழனின் கொடி பறந்தாலும் அவன் ஏனோ அங்கோர் வாட் கோவிலை கைபற்றி சைவ தலமாக்கவில்லை, வைணவ தலம் என்பதால் விட்டுவிட்டான் போல..
ஆனால் அவன் மனதில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற்று
அந்த தாக்கமே தஞ்சை பெரியகோவில் பெரும் அதிசயமாக மாற உருவாயிற்று. காம்போஜ ஆலயம் போல வரலாற்றில் ஒரு சைவ ஆலயம் நிற்க வேண்டும் என சோழன் கட்டியதே தஞ்சை பெரியகோவில்
இங்கு தஞ்சை கோவில் நம் கண்முன் கொண்டாடபட, அரச குழப்பங்களால் கம்போடியா வீழ்ந்து போக அக்கோவிலும் நாசமாயிற்று
பின்னாளைய அரசர்கள் தலைநகரை மாற்றிகொண்டு போக, அந்த அற்புத கலை பெட்டகம் காடுமண்டி போயிற்று
தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் பிரான்ஸின் படையெடுப்பு எல்லாம் அந்நாட்டின் தலைவிதியினை மாற்றின‌
பின்பு ஆங்கிலேயன் ஒருவன் அப்பக்கம் நாடு நாடாய் சுற்றும்பொழுது, காடு காடாய் சுற்றும்பொழுது அட இதென்ன ஒரு சுவர் நீண்டுகொண்டே செல்கின்றதே என ஆய்ந்து அசந்து நின்றான்
கொஞ்சம் கொஞ்சமாக 19ம் நூற்றாண்டில் அதன் பிரமாண்டம் கண்டறியபட்டபொழுதே தன் பெருமையினை உணர்ந்து கொண்டது கம்போடியா
இன்று அது புத்தநாடு என்றாலும் அது விஷ்ணுவுக்காக கட்டபட்டது என்பதை அது மறுக்கவில்லை மாற்றவுமில்லை
அந்த பெருமை பொக்கிஷத்தை தன் அதிசய பாரம்பரிய பொருளாக காட்டி தன் கரன்சியிலும் அச்சிட்டு பெருமை கொள்கின்றது அந்நாடு
இன்று கம்போடியாவின் மகா உச்ச வருமானமே இந்த ஆலயத்தை காண வரும் சுற்றுபயணிகள்தான்
அது சர்வ நிச்சயமாய் உலக அதிசயம், சந்தேகமே இல்லை அவ்வளவு பெரிய ஆலயமும் 40 ஆண்டுகளில் அது கட்டி முடிக்கபட்டு பல நூற்றாண்டுகளாய் அது பெரிதாக்கபட்ட அளவும் மாபெரும் அதிசயமே
ஆனால் ஏன் உலக அதிசயம் ஆகவில்லை என்றால் அது தாமதமாக கண்டறியபட்டது, இன்னொன்று அதை பற்றி உலக அரங்கில் பேச யாருமில்லை
ஒரு இந்து தேசம் இந்த உலகில் வலுவாக இருந்திருக்குமானால் அது உலக அதிசமாயிருக்கும்
ஆனால் வறிய கம்போடியாவும், அதன் ஏழ்மையும் இந்துமதத்தையும் தமிழனையும் பற்றி நினைத்துபார்க்க யாருமில்லை என்பதாலும் அந்நிலை எட்டாமல் போயிற்று
ஆனாலும் என்ன உலகம் சொல்லாவிட்டால் வைரம் மின்னாமல் போய்விடுமா?
அந்த அங்கோர்வாட் பல உண்மைகளை உலகுக்கு சொல்லிகொண்டே கம்போடியாவில் சாட்சியாய் வீற்றிருக்கின்றது
ஆம், உலகின் மிகபெரும் வழிபாட்டு தலம் ஒரு இந்து ஆலயம். அதை உருவாக்கியவன் தமிழன்
இந்துமதமே தொடக்கத்தில் இருந்தது, இடையில் வந்த புத்தமதம் இந்து ஆலயங்களை கைபற்றி தன் வயபடுத்தி இடையிலே ஒழிந்தும் போனது
தமிழன் தான் சென்ற இடமெல்லாம் இந்து தர்மத்தை பிரமாண்டமாய் பின்பற்றினான் அவனின் கனவும் வாழ்வும் தவமும் அதுவாய் இருந்தது
ஆம், ஒவ்வொரு இந்துவும் நினைத்து நினைத்து பெருமைபட வேண்டிய பிரமாண்டம் அது
தமிழக இந்துக்களின் பெருமை தஞ்சை ஆலயம் மட்டுமல்ல, அதை விட பெரும் சிறப்பான அங்கோர்வாட் ஆலயமுமே
மிக பரந்ததும் பழமையானதுமான அந்த ஆலயத்தை கம்போடிய அரசால் முழுக்க பராமரிக்க முடியவில்லை, யுனெஸ்கோ கட்டுபாட்டில் இருக்கின்றது ஆலயம்
அதில் ஒரு பகுதிக்கு புத்த குருக்கள் வந்து செல்வர், மற்ற பெரும் பகுதி பராமரிப்பு இன்றியும் இந்து சமய சுவடுகளை தாங்கியும் நிற்கின்றது
அந்த கம்போடியா மட்டும் இந்தியாவின் பகுதியாக இருந்திருக்குமென்றால் இன்று எப்படி எல்லாமோ அந்த ஆலயம் பிரசித்தி பெற்றிருக்கும்
என்றோ நம்மோடு இருந்த பகுதிக்கு இனி நாம் உரிமை கொண்டாட முடியாது
ஆயினும் நம் பாரம்பரியத்தில் வந்த அந்த ஆலயத்தை சீர்படுத்த உரிய காலம் வரும்
ஒரு நாள் இந்த திருநாடு முழு இந்து தர்ம நாடாக மாறும், அன்று கம்போடியா அங்கோர் வாட் ஆலயத்தை புதுபித்து சிறப்பிக்க இந்நாடு முன்வரும்
வந்தது அழியும், அழிந்தது திரும்பும்
உருவாக ஒரு காலமுண்டு, அது பாழ்படவும் காலம் உண்டு, அது மறுபடி எழவும் ஒர் காலம் உண்டு
தமிழனின் பெருமையும் தூய இந்துவாக அவன் வாழ்ந்த வாழ்வும் அவன் உருவாக்கிய பிரமாண்ட ஆலயங்களும் இந்தியாவில் மட்டுமல்ல , இலங்கையிலும் மட்டுமல்ல‌
கம்போடியாவில் உலக அதிசயமாகவே உறங்கிகொண்டிருக்கின்றது
இந்து என தன்னை உணரும் ஒவ்வொருவனும் பார்த்து ஆனந்தபட வேண்டிய ஆலயம் அது , தமிழன் என உணரும் ஒவ்வொருவனும் தன் பாரபரிய பெருமையினை உணரவேண்டிய பூமி அது
தமிழன் கடல் கடந்ததும் அங்கு ஆண்டதும் ஆலயம் கட்டியதும் தன் பெருமையும் பாரம்பரியமும் தன் மதத்தின் அடையாளமும் பின்னொருநாள் உலகிற்கு தெரிய வேண்டும் எனபதற்காக இறைவன் ஆடிய நாடகத்தின் எஞ்சிய காட்சி கற்கோவிலாய் அங்கு நிலைபெற்று நிற்கின்றது
அதை பார்க்காமல் சாகின்றவன் இந்துவாகவும் தமிழனாகவும் வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை..


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக