பகிர்ந்து கொண்டவர்கள்!

வியாழன், ஜனவரி 2

அது என்ன தமிழ்க்கடல்?

//அருமை...மிகக்குறுகிய நேரத்தில் பேசக்கூடாத, நினைக்க கூட கூடாத வார்த்தைகளை பேசிவிட்டு பின்பு இவர்களால் என்னை என்ன செய்ய முடியும் என்ற ஏளனத்தில் கண்கள் பிறழ்வதுபோல் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஸ்ட்ரெச்சரில் போகும்போது நடிப்பத்தை கூட சரியாக செய்ய தெரியாமல் பாக்கெட்டில் பேனா, மொபைல் உடன் சென்ற ஒரே நோயாளி...பெரம்பாளூரில் லாட்ஜில் வைத்து பொடணியோட சேர்த்து தட்டி இப்போ தெம்பாக நடந்தே ஜீப்புக்கு செல்ல வேண்டிய நிலைமை...//

ஏலே அங்க பாத்தியா... நம்ம நெ.கண்ணன் அண்ணாச்சி உடம்புக்கு முடியாம மயக்கம் போட்டு, படுத்த படுக்கையா ஆஸ்பத்திரிக்கு போறப்போ கூட, சட்டை பாக்கெட்ல பேனாவையும், செல்போனையும் மறக்காம எடுத்து வைச்சிருக்காவ பாரு! 'என் உடம்புக்கு ஒண்ணும் ஆகாதுலே'ன்னு எப்படி நமக்கு தெளிவா புரிய வைக்குறாவ... அவரு வேற லெவலுவே!' - திருநெல்வேலி இளைஞர்களின் நேற்றைய இந்த வார்த்தையில், சிறு குட்டையாகிப் போனது தமிழ்க்கடல்.



அது என்ன தமிழ்க்கடல்?


பரந்து விரிந்திருக்கும் கடல் போல் தமிழ் பேசுகிறாராம் நெ.கண்ணன். இருக்கலாம்; அவர் பேசும் தமிழில் பழுதில்லை என்றாலும், அத்தமிழ் கொண்டு அவர் கக்கும் விஷயங்களில் நிரம்பித் ததும்புகிறதே கொடும் விஷம்!

ஆனாலும்... சபாஷ் கண்ணன்; நீங்கள் பெரும் சாமர்த்தியசாலி! இஸ்லாமியர்களின் மேடையை, உங்களின் மீதான அவர்களின் அன்பை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு என்னவெல்லாம் பேசி வந்து விட்டீர்கள். ஏன் கண்ணன்... அவர்களை இப்படி ஏமாற்றுகிறோமே என்று, ஒரு நொடி கூட உங்களுக்கு தோன்றவே இல்லையா?






நினைவிருக்கிறதா?

நாயகன் திரைப்படம் வந்த நேரம் அது. அப்படம் தொடர்பாக நீங்கள் நடுவராக பங்கேற்ற பட்டிமன்ற மேடையில், 'கதையில் ஓர் இந்து பையன் இஸ்லாமியருக்கு மகனாகிறான்; இந்த நாட்டுக்கு தேவையான செய்தி' என்றீர்கள்; நினைவிருக்கிறதா?

நீங்கள் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த நேரம் அது. 'இப்போதிருக்கும் இந்து - முஸ்லிம் ஒற்றுமை அப்போது இல்லை' என்பதை, 'இந்த நாட்டுக்கு தேவையான செய்தி' எனும் வார்த்தைகளின் மூலம் நீங்கள் உறுதிப்படுத்தினீர்கள்.

அப்படியே கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள்; உங்கள் காங்கிரஸின் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2010, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நம் ராணுவ படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட காஷ்மீர் மக்களின் எண்ணிக்கை 52. இதில் பல சிறுவர்களும் அடக்கம்.

போராட்டக்காரர்களுக்கு உதவுவதற்காக இஸ்லாமிய பெண்கள் கற்கள் தந்து உதவினர். போராட்டத்தில் காயம் அடைந்தவர்கள் மீள ரத்த தான முகாம்கள் அமைக்கப்பட்டன. இவ்வளவு ஏன்... போராட்டக்காரர்களுக்கு உதவ சமூக உணவுக்கூடம் அமைக்கும் அளவிற்கு உக்கிரம் பெற்றிருந்தது மக்கள் எழுச்சி. பின்னணியில் யார் என்ற கேள்விக்கு, 'லஷ்கர் இ தொய்பா' என்றது காங்கிரஸ் அரசு.






துாண்டுதல் தானே?

இன்று இப்படியான போராட்டங்களும், துப்பாக்கிச் சூடும் காஷ்மீரில் உண்டா; 'குடியுரிமை சட்ட திருத்தத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் போராடும் நபர்கள் அத்தனை பேரும் இஸ்லாமியர்கள் தான்' என்று நீங்கள் உட்பட யாருமே உத்தரவாதமாக சொல்லாத சூழலில், நம் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் குறிப்பிட்டு, 'இஸ்லாமியர்கள் யாராவது அவர்களின் சோலியை முடிப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்' எனச் சொல்வது, அப்பட்டமான மதக்கலவரத்திற்கான துாண்டுதல் தானே!

இத்தனைக்கும் மேலப்பாளையம் நிகழ்ச்சியில் உங்களுக்கு முன்பாக பேசிய வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, அவரது பேச்சின் துவக்கத்தில், 'இந்தியா எனது நாடு' என்று சொல்லி உரையை துவக்கியதாக நீங்கள் பாராட்டினீர்கள். 'தன் தேசத்தின் மீதான அவரது அன்பை நம் கொச்சைப் பேச்சால் அழுக்காக்கி விட்டோமே' எனும் குற்ற உணர்வு உங்களுக்குள் எழவில்லையா?

இத்தோடு மட்டுமா விட்டீர்கள்; ஆதாரமில்லாத தவறான விஷயங்களை மேற்கோள் காட்டும் போதெல்லாம், 'இப்படிப்பட்ட விஷயங்கள் ஹைதர் அலிக்கும் பிடிக்கும்' எனச்சொல்லி, அவரையும் களங்கப்படுத்தி விட்டீர்களே!


அப்பன் காட்டிய வழியா?

நம் பிரதமரின் சொந்த வாழ்க்கையை குறிப்பிட்டு, 'அவர் ஏன் தன் மனைவியோடு வாழவில்லை என்பதை தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி மட்டுமே அறிவார்' என நீங்கள் சொன்னது எத்தனை கீழ்த்தரமான பேச்சு. அறம் சார்ந்த விஷயங்களை தந்த, எந்த விஷயத்தையும் அறிந்து கொள்ளாமல் பேசாதே எனும் அறிவுரை வழங்கிய வள்ளுவனை உங்கள் அப்பன் என்கிறீர்களே... ஆதாரம் இல்லாத விஷயங்களை, பெண்மையை அழுக்காக்கும் விஷயங்களை மேடையில் பேசச்சொல்லி அந்த அப்பன் எந்த குறளில் உங்களுக்கு போதித்தார்?

''அறத்தினுாங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு''

எனும் குறள் மேடையில் உங்கள் நினைவுக்கு வரவில்லையா?


வெளுத்தது சாயம்!

ஆனாலும் கண்ணன்... மோடி, அமித்ஷாவின் சோலியை முடிக்க நீங்கள் துாண்டியபோது சற்று உணர்ச்சிவசப்பட்டு கைதட்டியவர்கள், அடுத்தடுத்த கணத்தில் உங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டனர். அதற்கான பெரும் சாட்சி தான்... 'புல்வாமாவில் நம் ராணுவ வீரர்கள் பலியானதற்கு காரணம் பா.ஜ., ஆட்சியாளர்கள் தான்' என்று நீங்கள் கத்தியபோது, கூட்டத்தில் அமைதி காத்தது; வாழ்க்கை தரும் நாட்டின் மீது இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் பக்தியின் வெளிப்பாடு அது!

இனியாவது புரிந்து கொள்ளுங்கள்; பாபர் தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு எழுதிச் சென்ற உயிலில், 'மகனே குறுகிய மத உணர்வுகளாலும், தவறான எண்ணங்களாலும் உன் மனம் பாதிப்படைய அனுமதிக்காதே' என்று சொல்லியிருப்பதாக செய்தி உண்டு. திருவள்ளுவர் மகனான உங்களுக்கு எப்படியோ, ஆனால் பாபரை வழிபடும் துாய்மையான இஸ்லாமியர்கள் இதை பின்பற்றுகின்றனர் என்பதே உண்மை.






நரம்பில்லா நாக்கு

'உன் மதம் உனக்கு: அவன் மதம் அவனுக்கு' எனும் நபிகள் கூற்றை சொல்லும் அதே மேடையில், 'இந்து மதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது' என்கிறீர்கள். உங்கள் நாக்கு சூழலுக்கு தகுந்தபடி சுழலும் வல்லமை பெற்றது என்பது, மேலப்பாளையம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தெரியாதா என்ன?

ஒரு சின்ன உதாரணம்... மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி விட்டு, 'மாதா என்பவள் பிதாவை காண்பிக்க வேண்டும்; மாதா - பிதா இணைந்து குருவை காண்பிக்க வேண்டும்; மாதா - பிதா - குரு மூவரும் சேர்ந்து தெய்வத்தை காண்பிக்க வேண்டும்' என்று நீங்கள் பேசினால்... அது புத்தக காட்சி மேடை.

'இறைவன் உருவமற்றவன்; இப்படி நான் சொல்வதை இஸ்லாமிய இதழான 'மறுமலர்ச்சி' பாராட்டி இருக்கிறது' எனச் சொன்னால், அது இஸ்லாமிய மேடை; இம்மேடையில் கூட இதைச் சொன்னீர்கள் கண்ணன்.

'படித்ததை இடத்திற்கு தகுந்தபடி மாற்றிப் பேசுவது தான் திறமை' என்று, மேடைகளில் நீங்கள் அடிக்கடி சொல்வது தான் இதற்கான பதில்; சரிதானே கண்ணன்?


ஆணவத்தின் உச்சம்

உங்களுக்கு அதீத அரசியல் அனுபவம் உண்டு தான்; தமிழ் புலமை உண்டு தான்; அதற்காக, இத்தனை ஆணவமா; இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்பவர்களை பார்த்து, 'உங்கள் நாட்டுக்கு சென்று விடுங்கள்' என்று, உத்தரபிரதேச மீரட்டில் காவல் துறை அதிகாரி சொன்னது குற்றம் என்கிறீர்கள்.

சரி... அது குற்றம் எனில், '15 லட்ச ரூபாய் உங்கள் கணக்கில் வந்து விழும் என்றதும், மோடிக்கு எத்தனை நாய்கள் ஓட்டு போட்டான் தெரியுமா' என்று நீங்கள் சொன்னது, கொலைக்கு சமம் அல்லவா?

ஆனாலும் சுதாரித்ததாய் காட்டிக் கொண்டு, 'தமிழன் ஓட்டு போடலை' என்றீர்கள். அது சுதாரிப்பல்ல... பயம்; தமிழன் மீதான பயம். உங்களுக்கு நன்றாகவே தெரியும்; பா.ஜ., தமிழகத்தில் ஜெயிக்கவில்லையே தவிர, கணிசமான ஓட்டுகளை வாங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, நீங்கள் 'நாய்கள்' என்று குறிப்பிட்டது தமிழனையும் சேர்த்து தான்! 'நான் கடவுளுக்கு மட்டும் தான் பயப்படுவேன்' என்று மேடை தோறும் சொன்னாலும், 'நாய்கள்' என்று உச்சரித்துவிட்டு நீங்கள் பயந்தது உண்மை.

'உன்னால எதுவும் என்னை செய்ய முடியாது' என ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளுக்கு முன் சொன்னதாக, அப்பெண் சிங்கம் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பின் நீங்கள் சொல்லியதில் தெறித்தது... உங்கள் வீரத்தின் வீரியம்!






யார் முட்டாள்?

இஸ்லாமிய நண்பர்களுக்கு எதுவும் புரியாமலில்லை; ஆனாலும், நீங்கள் பேசும்போது அமைதி காத்தார்கள்; அவர்களின் அந்த பெரும் குணம் உங்களுக்கான அவமானம்! இதற்கும் ஓர் ஆதாரத்தை அதே மேடையில் நீங்களே வீசினீர்கள். பா.ஜ.,வை குறிப்பிட்டு, 'இன்னும் அவன் ஏதோ பெரிய ஆள்னு நினைக்கிற முட்டாள்தனம் நம்ம சில பேர்கிட்டே இருக்கு' என்ற போது, கூட்டத்தில் அமைதி.

காரணம், அதற்கு சற்றுமுன் தான், 'சின்னப் பசங்களை பத்தி நான் பேச மாட்டேன்' என்று சொல்லி, 'பெரிய மனிதர்களைப் பற்றி மட்டும் தான் நான் பேசுவேன்' என்று புரிய வைத்தீர்கள். அவர்களுக்குத் தெரியுமே... யாரைப் பற்றி நீங்கள் பேசினீர்கள் என்று; யார் முட்டாள் என்று!


குர் ஆன் வாசகம்

'தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்யும் இவர்களை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்ய மாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்து கொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?'

கடவுளுக்கு மட்டுமே பயப்படும் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் தற்போது மருத்துவமனையில் இருக்கும் தருணத்தில், குர் ஆனின் இவ்வாசகம் தான் நினைவிற்கு வருகிறது கண்ணன்.


கேள்விகள் இரண்டு

நெ.கண்ணனே...

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை உள்ளடக்கிய ஒற்றுமையான தமிழ்ச்சமூகம், இத்தருணத்தில் உங்களிடம் இரு கேள்விகளை முன் வைக்கிறது...

*காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மத்தியில் ஆட்சி நடத்திய 2010ம் ஆண்டில், ஜனவரி தொடங்கி ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், மகாராஷ்டிராவின் தத்தா பட்டீல், விட்டல் கைட், அருண் சாவந்த், சதீஷ் ஷெட்டி; குஜராத்தின் விஷ்ரம் லஷ்மன் தோடியா, அமீத் ஜேத்வா; பிஹாரின் சஷில்தர் மிஸ்ரா; ஆந்திராவின் சோலா ரங்காராவ் எனும் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும், ஆர்.டி.ஐ., போராளிகள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய அரசின் அவலங்களை தோலுரித்தவர்கள். சொல்லுங்கள்... இந்தியர்களின் கருத்து சுதந்திரம் இந்த அளவிற்கா தற்போது மோசமாகி இருக்கிறது?

*இலங்கை போருக்குப் பின், நிருபமாராவ் இந்திய வெளியுறவு செயலராக இருந்த காலகட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவின் அடிப்படையிலும், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் வழிகாட்டுதலின் பேரிலும் இலங்கை தமிழர்களின் நிலை அறியச் சென்றார்.

அவரிடம் யாழ்ப்பாண நுாலக கூடத்தில் வரலாற்று பேராசிரியரான சி.க.சிற்றம்பலம், 'போரின் இறுதிகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது தான் பொதுமக்களை கொல்வதற்கு காரணமாக அமைந்தது' என்று பகிரங்கமாய்ச் சொன்னார். அப்போது 13 - 14 வயது தமிழின சிறுமியர் பலர் இலங்கை மண்ணில் கர்ப்பம் தரித்திருந்தனர். சொல்லுங்கள்... இலங்கை தமிழர்களை பெருமளவில் அகதிகளாக்க உதவியது யார்?

போதும் கண்ணன்; இஸ்லாமியர்களை சாட்சியாகக் கொண்டு, மேலப்பாளையம் மேடையில் அழுத்தம் திருத்தமாக நீங்கள் சொன்னதே இக்கட்டுரையின் முடிவுரையாக இருக்கட்டும்...

'கடவுள் மிகப்பெரியவன். ஒருத்தனை ரொம்ப ஆட விட்டான்னா, சீக்கிரம் முடிக்கப் போறான்னு அர்த்தம்!'

- வாஞ்சிநாதன் (Vanjinath40@gmail.com)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக