பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், ஏப்ரல் 29

ஆமைக்கறியும் வெனிசுலா புர்ச்சியும் ...!

இன்னமும்  செபஸ்தியான்  சைமன் போன்ற போலிகளின் அடாவடிப் பொய்களை எல்லாம் நம்பாதீர்கள்  புறந்தள்ளுங்கள் !




Maridhas M



வெனிசுலா வீழ்ச்சிக்குக் காரணம் விவசாயத்தைக் கைவிட்டது தான் என்று பரப்பும் மீம்ஸ் , செய்திகளுக்கு உங்கள் கருத்து என்ன மாரிதாஸ்? {கேள்வி: பிரபாகரன், சத்யா}
இன்றைய தேதியில் வெனிசுலா தான் உலகத்தின் அதிகம் கச்சா எண்ணெய் இருப்பில் உள்ள நாடு. 300,878 million barrels ரிசர்வ் உள்ள இந்த நாடு சவுதி அரபியாவை விடச் சற்று அதிகம் எண்ணெய் வளம் உள்ள நாடு ஆகும். ஆனால் 2015க்கு பின் மட்டும் இந்த நாட்டை விட்டு சுமார் 16 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளார்கள், சரியாகக் கூறினால் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வெளியேறி கம்போடியா , பெரு , பிரேசில் , அமெரிக்கா என்று வெறியேற்றியுள்ளார்கள். இதற்குக் காரணம் விவசாயம் என்று நமது ஆன் லைன் விவசாய போராளிகள் , தமிழ் தேசியவாதிகள் பரப்பும் கருத்து முழுக்க முழுக்க தவறான கருத்து.
பின் எதனால் இந்த சரிவு???
1998 தேர்தலில் Hugo Chávez என்ற கம்யுனிஸ்ட் தலைவர் வெற்றி பெறுகிறார். அவர் வெற்றி பெறுவதற்குக் காரணம் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரங்கள். அது என்னவென்றால்
1.விவசாய நிலங்கள் இருப்பவர்களிடம் இருந்து எடுத்து அனைத்தையும் பகிர்ந்து அனைத்து பின் தங்கிய மக்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் நிலம் பொது உடைமை ஆக்கப்படும்.
2.அனைத்து கார்ப்பரேட் அன்னிய நிறுவனங்களும் அரசு கையகப்படுத்தி அதை நாட்டுடைமை ஆக்குவும். அரசே அதை நடத்தும் தனியார் நீக்கப்படுவர்.
இப்படியான புரட்சிகர கம்யுனிஸ்ட் கருத்தைத் தீவிரமாகப் பரப்ப அத்துடன் இனவாதத்திற்கு Revolutionary Bolivarian Movement என்ற பெயரில் அதையும் மக்கள் இனவாதத்தையும் சேர்த்துக் கொண்டுவிட இவர் ஒரு புரட்சி செய்கிறார் என்று மக்கள் நினைத்துக் கொள்ள நாடு முழுவதும் சே குவேரா படங்களுடன் இவர் படம் , பிடல் காஸ்ரோவுடன் இருக்கும் படங்கள் வரைந்து முழுக்க முழுக்க வெகுஜன மக்களுக்குப் பிடிப்பது போல் ஒரு அரசியல் நகர்வை இந்த கம்யுனிஸ்ட் தலைவர் மேற்கொண்டார். அதன் வழி வெற்றியும் பெற்றார். வெற்றி பெற்று இவர் ஆட்சியை 1999வந்த பின் இவர் சொன்னதை அனைத்தையும் செய்யத் தயார் ஆனார். அன்று கச்சா எண்ணெய் உற்பத்தியும் இந்த நாட்டில் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருந்த நேரம்.
முதலில் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒவ்வொன்றாக அரசு கையகப்படுத்திய செய்தியை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். மக்கள் ஒரே சந்தோசம்.... அதன் படி இவர் போக்குவரத்து , மின்சாரம் , கப்பல் கட்டுமானம், தொலைத்தொடர்புத் துறை, ஸ்டீல் உற்பத்தி ஆலைகள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகள், சிமிண்ட் உற்பத்தி நிறுவனங்கள் , வங்கிகள் என்று அனைத்து துறையின் பெரும்பாலான நிறுவனங்களை கையகப்படுத்தினார். இந்த முயற்சியில் அவர் சுமார் 511 பெரும் நிறுவனங்கள் வரை அரசுடைமை ஆக்கினார். மக்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசம். அடா அடா என்ன ஒரு தலைவர்.
அத்துடன் விவசாய நிலங்களை பொதுவுடைமை ஆக்கினார். அந்த நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்த நடவடிக்கை மூலம் சுமார் 60லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு வரை அரசு மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தது.. இதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.
{இந்த இடத்தில் ஒரு முக்கியமான செய்தி சொல்லி ஆகவேண்டும். அது இந்த விதம் கம்யூனிஸ்ட் அரசு வெனிசுலாவில் செய்யும் சீர்திருத்த நடவடிக்கைகளைப் புகழ்ந்து தள்ளி கட்டுரைகளை இந்தியாவில் வெளியிட்ட பலரும் உண்டு. அதில் முக்கியமான கட்சி மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி CPI-M. இவர்கள் 2006கூட பல விதத்தில் இதை இங்கே பிரச்சாரம் செய்தார்கள். அன்று நான் கல்லூரி மாணவர் , பெரிய அளவில் நாம் கம்யூனிஸ்ட் விரும்ப இந்த வெனிசுலா Bolivarian Movement ஒரு காரணம். இப்போது நான் கம்யூனிஸ்ட் இல்லை. அதையும் சொல்லிக் கொள்கிறேன்.}
படித்த உங்களுக்கும் மேலே அவர் மேற்கொண்டிருந்த சீர் திருத்த நடவடிக்கைகள் பிரித்திருக்கும். ஆம் ஆனால் நடந்தது என்ன????? அந்த உண்மையையும் பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------
உண்மையில் Hugo Chávez பெரும் நிறுவனங்களை கையகப்படுத்தினார் உண்மை தான். ஆனால் அவர் சும்மா கையகப்படுத்தவில்லை. இது ஒன்றும் 1920கள் கிடையாது நிறுவனங்களை வெளியே என்றால் போகவும் உள்ளே வா என்றால் வருவதற்கும். இன்று ஒரு நிறுவனம் முறையாகச் சட்டதிட்டம் இல்லாமல் வெளியேற்றா முடியாது அப்படி முற்பட்டால் அது ஐ நாவின் பகுதியாக இயங்கும் உலக வங்கி வரை செல்லும் - அங்கே International Center for Settlement of Investment வரை விவகாரம் செல்லும்.
எனவே அரசு கையகப்படுத்த வேண்டும் என்றால் அந்த நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்த நிறுவனத்தின் பங்குகளை மொத்தமாக மார்கெட் விலைக்கோ , இல்லை அடிப்படை விலைக்கோ வாங்கி தான் கையகப்படுத்த முடியும். எனவே வெனிசுலா கம்யூனிஸ்ட் அரசு என்ன செய்தது என்றால் கச்சா எண்ணெய் மூலம் வந்த வருமானத்தை எடுத்து அங்கே இருக்கும் பெரும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வாங்கினார்கள். இப்படி தான் கையகப்படுத்தினார் தவிர அரசு உடைமை ஆக்குகிறேன் என்று மக்களுக்குச் சொல்லலாம் ஆனால் அது எப்படி நடந்தது என்ற வெளிபடை தன்மை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
அதன் படி 2007ல் power sectorல் பெரும் னி நிறுவனமான AES Corp நிறுவனத்தின் 82% பங்குகளை சுமார் 740மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். அடுத்து நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனமான Conferry நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்க 800 மில்லியன் அமெரிக்க டாலரை கட்டினார் , ஸ்டீல் நிறுவனமான Ternium அரசுடைமை ஆக்குவதற்கு மட்டும் 2009ல் இவர் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்க வேண்டி இருந்தது, அடுத்து Telecom நிறுவனங்கள் ஒவ்வொன்றாக கையகப்படுத்த முயன்றார் CANTY , Verision போன்ற பங்குகளை 28% வாங்குவதற்கு சுமார் 572மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்தார், சிமிண்ட் உற்பத்தி நிறுவனமான CEMEX நிறுவனத்திற்கு இவர் கொடுத்த விலை 780 மில்லியன் அமெரிக்க டாலர். இதே போன்று இவர் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கினார்.
முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது இது தான். இவர் அரசுடைமை ஆக்குவேன் என்று தேர்தலில் கூறலாம் ஆனால் நடைமுறையில் அது இப்படி தான் நடக்க வேண்டும் வேறு வழி இல்லை. இதற்காகவே நாட்டின் பெரும் செல்வத்தைக் கச்சா எண்ணெய் மூலம் வந்த காசை செலவு செய்திருந்தார். சரி விளைவு????
தனியார் நிறுவனத்தை வாங்கிவிட்டாச்சு , அவனும் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவான். ஆனால் இப்போது அந்த நிறுவனங்களை அரசு நடத்த வேண்டும், யாரை வைத்து அரசு ஊழியர்களையும் , அதிகாரிகளையும் வைத்து அந்த நிறுவனங்களை நடத்த வேண்டும். இனி வரும் லாபம் , நஷ்டம் அனைத்தும் அரசு ஏற்கும் சரி தானே. இப்போது தான் ஆரம்பித்தது அரசு ஊழியர்கள் பணி கடமைகள். லஞ்சம் உச்சத்தைத் தொட்டது , அனைத்து துறைகளிலும் உற்பத்தித் திறன் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. கொடூரமான வீழ்ச்சி.
எடுத்துக்காட்டுக்கு ஸ்டீல் நிறுவனமான Ternium விட்டுச் செல்லும் போது அது சுமார் 44,00,000 மெட்ரிக் டன் ஸ்டீல் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. ஆனால் என்று அது அரசுடைமை ஆனதோ அன்று ஆரம்பித்தது அந்த நிறுவனத்திற்கு வீழ்ச்சி , மெல்ல ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியைச் சந்தித்து 2015 ல் வெறும் 10,00,000மெட்ரிக் டன் என்று குறைந்தது. அது இன்னும் வீழ்ச்சியைச் சந்தித்து 2016ல் வெறும் சில ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தி செய்தது. இதே போல் இன்னொரு எடுத்துக்காட்டு மின்சார உற்பத்தி நாட்டின் தேவை சுமார் 34,500 மெகா வாட் என்று இருக்க , ஆனால் உற்பத்தியானது 2003ல் படிபடியே வீழ்ச்சியைச் சந்தித்து வெறும் 5000 முதல் 6000 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்தார்கள்.
இதனால் தான் அந்த நாட்டில் பகல் பொழுதுகளின் நிறுவனங்களுக்கு , கடைகள் வீடுகளுக்குப் பகல் 2 மணி வரை மட்டுமே மின்சார கொடுக்கும் நிலைக்குச் சென்றது.
ஏன் இந்த அளவிற்கு வீழ்ச்சி என்றால் ஒரு பக்கம் அரசு அதிகாரிகள் லஞ்சம் என்றால் , இன்னொரு பக்கம் இயற்கையாக இது அரசு நிறுவனம் எனவே அதன் மீது அந்த தொழிலாளர்களுக்கும் சரி நிர்வாகிகளுக்கும் சரி ஒரு கண்டுகொள்ளத் தேவை இல்லாத மன நிலை , அடுத்துச் சரியான maintainace இல்லை , எதிர்காலத்திற்குத் தகுந்தது போல் மேம்படுத்தவில்லை. இப்படி காரணங்கள் ஒரு பக்கம் அடுக்கிக்கொண்டே போனாலும் உண்மையில் நிறுவனங்கள் போட்டி இருந்தால் தான் சந்தையில் வேகமாகச் செயல்படும் இல்லை இந்த நிலையை எட்டும் என்பது 60 வருட வரலாறு. இங்கே அரசுடைமை ஆனது பெரிய தவறு. எனவே போட்டி இயற்கையாக முடிவுக்கு வந்தது.
எடுத்துக்காட்டுக்கு :
BSNL மட்டுமே ஒரே நிறுவனம் என்று இருந்த காலத்தில் பெரும் மோசமான சர்வீஸ் மக்களுக்கு ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் 10,000கோடிக்கு மேல் நஷ்டமும் ஆனது. காரணம் அரசு ஊழியர்கள் காட்டும் அந்த வேலைத் திறன் ஒன்று இன்னொன்று போட்டி இல்லாததால் வேகமாக புதிய தொழில் நுட்பங்கள் வந்து சந்தையில் போட்டியை உருவாக்காது. {நஷ்டம் என்றால் நமது மக்கள் வரிப்பணத்தைக் கொடுத்து அரசு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று அர்த்தம்.}
இன்று Airtel , vodafone வந்து சந்தையில் நல்ல மாற்றத்தை உருவாக்கின - ஆனால் அவர்களும் அதிகம் கட்டணம் வசூல் செய்ய jio சந்தைக்கு புதிய தொழில் நுட்பத்துடன் பேசும் வசதியை முழுமையாகக் கட்டமில்லாமல் செய்து , internet Data மட்டுமே அதுவும் குறைந்த கட்டணம் என்று சந்தைக்கு வந்தது. இது தான் போட்டி - இது இருக்கும் போது தான் புதிய புதிய வகையில் தொழில் நுட்பங்களும் அங்கே வேகமாகச் சந்தையை கைபற்றி ஒரு நல்ல சர்வீஸ் மக்களுக்குக் கிடைக்க வழி வகை செய்யும் , இன்னொரு புறம் அதன் மூலம் வேலை வாய்ப்பு அரசுக்கு வரி கொண்ட வருமானமும் அதிகமாகும். மக்களுக்கும் நிம்மதி , அரசுக்கு நிம்மதி.
இதை உலகமே புரிந்து கொண்டது அதனால் தான் 1984களில் தனது கம்யுனிஸ்ட் பொருளாதார கொள்கைகளைச் சீனா மாற்றி இன்று தனியார் போட்டியை உருவாக்கிக் கொடுத்துத் தான் சீனா முன்னேறியது. {1984வரை சீனா இந்தியா ஒரே அளவு தான் GDP , ஆனால் அவர்கள் அரசு பொதுவுடைமை தவறுகளைத் திருத்தியது நாம் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அரசு ஊழியர்களிடமே விட்டது தவறு அதை இன்று தான் நாம் திருத்தி வருகிறோம்.}
எனவே 1984களில் உலகமே திருத்தி கொண்ட அந்த தவற்றை 1999ல் ஆட்சிக்கு வந்த இந்த வெனிசுலா கம்யுனிஸ்ட் தலைவர் மீண்டும் முயன்று தோல்வியைக் கண்டார். இந்த முயற்சி எல்லா நாடுகளிலும் எல்லாக்காலமும் கம்யூனிஸ்ட் முயற்சி செய்து தோல்வி கண்டார்கள் என்பதும் உண்மை. சீனாவில் இன்று 85% மேல் தனியார் நிறுவனங்கள் தான். விவசாயத்தில் பெரும் தனியார் அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்யலாம் என்று வழிவகை செய்துவிட்டது சீனா.
எனவே முதல் காரணம் தவறான பொருளாதார கணக்கீடு. அடுத்து முக்கியமான விவசாயம் வருவோம்..
விவசாயத்தைப் பொறுத்தவரை அவர் அவர் கூறியது போல் 50 லட்சத்திற்கும் மேலான ஏக்கர் நிலப்பரப்புகளை மக்களுக்கு பகீர்தளித்தார் , ஆனால் அதுவும் ஸ்டாலின் , மாவோ போன்ற கம்யுனிஸ்ட் சர்வாதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு பெரும் தோல்வியைத் தழுவிய தவறான கணக்கீடு என்பதை உணராமல் இவரும் அதே கம்யூனிஸ்ட் முன் வைத்த Collectivization முறையில் விவசாய உற்பத்தியைப் பெருக்கலாம் என்று திட்டமிட அதுவும் தோல்வி. ஆம் இவர் கொடுத்த நிலங்களில் இன்று 80% மேல் விவசாயம் நடைபெறவில்லை. ஏன்????
மக்களிடம் கேட்க , அவர்கள் வெகு சிலரைத் தவிரப் பலரும் சொல்லும் காரணம் அரசு எங்களுக்கு நிலம் மட்டுமே கொடுத்தது அதற்கு technical support கொடுக்கவில்லை. அதாவது அனைவரும் விவசாய நிலத்தைப் பெற்றார்கள் என்றால் விவசாயம் செய்வதற்கான அந்த ட்ராக்டர் போன்ற இயந்திர தேவை அதிகமானது - பிறசரனை அப்படி இருக்கும் இயந்திரங்களுக்கு ஸ்பேர் பர்ட்ஸ் கிடைக்கவில்லை - தேவையான விதை விவசாயத்திற்கு அரசு வழங்கவில்லை, மின்சார தட்டுப்பாட்டால் அதுவும் முறையாகக் கொடுக்கமுடியவில்லை.
இதையும் தாண்டி ஒரு முடிவை வெனிசுலா எடுத்தது அது தான் பெரும் வீழ்ச்சியை உணவு தட்டுப்பாட்டை உருவாக்கியது. அது price control விதியை கடுமையாக்கியது. அதாவது தங்கள் நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியை முறையாகத் தடுத்து உற்பத்தித் துறையில் தவறுகளைப் பொருளாதார முடிவுகளில் தவறுகளைத் திருத்தம் செய்து நாட்டின் பணமதிப்பை ணியி நிறுத்த முற்படாது - மாறாகப் பொருளின் விலையை அதுவும் விவசாய பொருட்களின் மீது விலை நிர்ணயம் செய்ய அரசு முடிவெடுத்தது. இதனால் நேரடியாக விவசாயம் செய்யும் எவருக்கும் நிச்சயம் மார்கெட்டில் விலை கிடையாது - 1000ரூபாய் செலவு செய்து நான் விவசாயம் செய்ய அதை மார்கெட்டில் price control விதியால் 600ரூபாய்க்கு நிர்ணயம் ஆனால் யார் விவசாயம் செய்வர்??? பலரும் பேசுவது போல் விவசாயம் செய்து உலகத்திற்கு உணவு அளிக்கவேண்டும் என்ற காரணத்திற்காக யாரும் விவசாயம் செய்யவில்லை வருமானத்திற்கு அதை ஒரு வழியாக நினைத்துச் செய்கிறார்கள் - அதனால் வருமானம் இல்லை நஷ்டம் என்றால் கட்டாயம் எவரும் விவசாயம் செய்யப் போவது இல்லை.
எனவே தான் இவ்வளவு விவசாய நிலங்கள் பிரித்துக் கொடுத்தும் 80% மேல் விவசாயம் அதில் செய்வதை மக்கள் விரும்பவில்லை. வேறு வேலைகளுக்கும் நாட்டை விட்டுக் கிளம்பவும் தயார் ஆனார்கள்.
அத்துடன் அது இலவசம் இது இலவசம் என்று அறிவித்த கம்யூனிஸ்ட் அரசு தன்னுடைய செலவினங்களையும் கூட்டிவிட்டது. அரசுப் பள்ளிகள் கல்வி இலவசம் என்று கூறலாம் ஆனால் அதற்கு வாடகை ஆரம்பித்து ஆசிரியர்கள் வரை யாரும் இலவசமாக வந்து நடத்த மாட்டார்கள். அவர்களுக்குச் சம்பளம் போடவேண்டும் அதற்குச் செலவு செய்தாக வேண்டும். இது போல் நாட்டின் அனைத்து அமைப்புகளிலும் செலவு உண்டு - அந்த செலவுகள் அனைத்தையும் இந்த நாடு மேற்கொண்டது முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் வைத்துத் தான். 92% அளவிற்கான மொத்த வருமானம் வெறும் கச்சா எண்ணெய்யை நம்பி மட்டுமே இருந்தது - அப்படி ஒரு நாட்டின் கட்டமைப்பைச் சீரழித்தது கம்யூனிஸ்ட் மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கை.
முதலில் இங்கே எந்த மாற்றமும் படிமுறையில் ஏற்படுத்த முடியுமே அன்றி கால்குலேட்டர் போல அடித்து இன்றே அதற்கு output கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இருக்கும் முறையைப் படிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். 
-----------------------------------------------------------------------
அடுத்து நமக்கு எழும் கேள்வி உலக நாடுகள் என்ன செய்கிறார்கள்??? அவர்களுக்கு ஐநா போன்ற அமைப்புகள் என்ன உதவி செய்தன???
நிச்சயம் இது நியாயமான சரியான கேள்வி... ஆனால் பிரச்சனை இங்கே முதலில் ஒரு தெளிவான அரசியலுள் அரசும் அங்கே இருக்கவேண்டும். அது 2013ல் இருந்தே கிடையாது. உண்மையில் மக்கள் முழுவதும் கம்யூனிஸ்ட் மீது கொண்ட அந்த நம்பிக்கையை இழந்தனர் - அதனால் தான் 2015ல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் அரசு தோல்வியைத் தழுவியது. கெடுவாய்ப்பாக அந்த தேர்தலின் முடிவை வெகு சீக்கிரமே ஏற்றுக்கொள்ள கம்யுனிஸ்ட் தயாராக இல்லை. எதிர்க் கட்சியாக நின்ற Juan Guaidó வெற்றியை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்து மொத்த நாடாளுமன்றம் சட்டதிட்டங்களை மாற்றி அமைத்து மீண்டும் ஆட்சியைத் தொடர்ந்தார்கள். இது மிக மிக மோசமான முடிவு.
இதனால் உலகநாடுகள் அமெரிக்க , ஐரோப்பிய யூனியன் இன்னும் பல நாடுகள் Juan Guaidó பக்கம் அவர் வெற்றியின் பக்கம் நின்றார்கள் ; இன்னொரு புறம் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு ரஷ்யா , சீனா, கியூபா என்று ஆதரவுகள் வரவே உலக நாடுகளும் இரண்டாகப் பிரிந்து நிற்கின்றன. இந்த குழப்பம் ஒரு புறம் என்றால்
ஐநா அதன் அமைப்புகளும் , உலக வங்கியும் , international monetary fund போன்றவை வெனிசுலா அரசுக்கு உதவத் தயார் - பிரச்சனை அந்த அரசு தங்களுடைய ஆட்சி நிர்வாகத்தினை வெளிப்படையாக வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மை உள்ள அரசால் தான் மக்களுக்கு உண்மையைக் கூற முடியும் , அந்த வெளிப்படையான நிர்வாக விவரங்களைக் கணக்கிட்டுத் தான் உதவவும் முடியும். கெடுவாய்ப்பாக கம்யூனிஸ்ட் அதற்குத் தயாராக இல்லை. இதனால் உதவுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இப்படி நாட்டின் நிர்வாகமும் ,ஆட்சியும் , நாடாளுமன்றம் நடவடிக்கைகளும் , அரசியலும் கூடுதலாகக் குழப்பத்தை உருவாக்கவே இன்று வெனிசுலா ஒரு மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது..
இது தான் காரணமே ஒழிய விவசாயத்தைக் கைவிட்டதால் அந்த நாடு இப்படி நிலைக்கு தள்ளப்பட்டதாகப் பரப்பும் செய்திகள் பொய்யானவை. அதைப் பரப்பும் இந்த தமிழ்த் தேசிய வாதிகள் மற்றும் சீமான் தம்பிகள் மேற்கொள்வது சுத்த வடிகட்டிய முட்டாள் தனமான பரப்புரை. இவர்களுக்கு எந்த கேட்டது எங்கே நடந்தாலும் அதை எப்படி தங்களுக்கு ஆதாயமாகத் திருப்பலாம் என்று சிந்திப்பதில் தான் கவனம் செளுத்திகிரார்கள் - ஒரு தனிப்பட்ட இருவரின் சண்டையைத் தெலுங்கன் தமிழன் என்று சமூக பிரச்சனையா மாற்றித் தூண்டிவிடுவதில் ஆரம்பித்து - எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு விவசாயத்தை இழுத்துப் பேசி உணர்வுப் பூர்வமாகப் பதிவுகளைப் பரப்பி ஒரு முட்டாள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள் இவர்கள். சீமான் அவர் கட்சி நிர்வாகிகள் ஒரு வித மன நோயாளிகளாகவே மாறிவிட்டார்கள். வேறு சொல்வதற்கு எதுவும் இல்லை.
ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களும் , அதன் தவறான பொருளாதார கொள்கைகளும் தான் முழுக்க முழுக்க வெனிசுலா என்ற கச்சா எண்ணெய் வளமிக்க ஒரு நாடு முழுமையாக நாசம் ஆகக் காரணமே தவிர வேறு எதுவும் காரணம் அல்ல. {சீனா கம்யுனிசத் பொருளாதாரம் எதுவும் பின் தொடர்வது இல்லை அது வெறும் ஒரு கட்சியின் சர்வாதிகார ஆட்சி அவ்வளவு தான்; இரண்டாவது ரஷ்யா அது கம்யூனிஸ்ட் நாடு அல்ல புதின் கம்யூனிஸ்ட் கட்சியை முழுமையாக ஒழித்துக் கட்டியவர். அந்த நாட்டு மக்கள் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட் அரசின் பெரும் தோல்வியை நன்கு உணர்ந்தவர்கள்.}
இதை இங்கே இருக்கும் எந்த கம்யூனிஸ்ட் வாயத் திறந்து பேசமாட்டான். 2006 வெனிசுலாவை பாருங்கள் என்று வெக்கமே இல்லாமல் வசனங்கள் பேசிய இந்த கம்யுனிஸ்ட் தலைவர்களும் , பத்திரிகையாளர்களும் இன்று வெனிசுலாவை கம்யூனிஸ்ட் அரசு என்று கூடச் சொல்ல கூச்சப்படுகிறார்கள். இதில் தி இந்து எழுதுகிறது இந்தியா வெனிசுலாவை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம்????? வெக்கமே இடையாது தி ஹிந்து பத்திரிகை நடத்தும் நிர்வாகிகளுக்கு?????
எனவே மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதிலிருந்து :
வெனிசுலாவில் டெலிகாம் முதல் ஸ்டீல் வரை மின்சாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்தையும் கையில் எடுத்த அரசு அதிலிருந்து ஏன் வருமானம் இல்லாமல் போனது????? கொடுமை அவை அனைத்துமே நஷ்டத்தில் இயங்கவும் அதற்கும் காசு செலவு செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு வெனிசுலா தள்ளப்பட்டது. (நமது BSNL போல் 300மேற்பட்ட அரசு ஊழியர்கள் கையில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் நமது நாட்டிலும் நஷ்டம் தான் அதையும் அனைவரும் மனதில் கொள்ளவும். அந்த நஷ்டமும் நமது வரிப்பணத்தின் மூலமே கொடுக்கிறார்கள். அப்படி என்ன வேண்டி இருக்கிறது அரசு இவர்களா வைத்து வேலை வாங்க?} அரசு செலவு செய்யும் பள்ளிகளுக்கான தொகையை எடுத்து தனியாரிடம் கொடுத்தால் இன்று தமிழகம் முழுவதும் CBSE பள்ளிகளாக மாற்ற முடியும். அந்த அளவிற்குச் செலவு செய்து தான் அரசுப் பள்ளிகளை நடத்துகிறது அரசு. அரசு ஆசிரியர்களுக்குச் சம்பளம் அந்த அளவிரற்கு கொடுக்கிறது. இது தேவையா???
அரசுப் பள்ளி நடத்த வேண்டும் , போக்குவரத்து நடத்த வேண்டும் , மருத்துவமனைகள் நடத்த வேண்டும் என்று பேசுவது சுத்த கம்யுனிஸ்ட் சித்தாந்தம் இது முழுக்க தவறான சிந்தனை. அதைத் திருத்துங்கள். ஏன் என்றால் ஒரு அரசு இயந்திரத்தின் வேலை அதுவல்ல - அனைத்து துறைகளையும் சரியாக இயங்கும் வண்ணம் நாட்டில் சட்டம் இயற்றி நாட்டாமை வேலை பார்ப்பது மட்டுமே. அத்துடன் வரி மூலம் செல்வம் ஒரு இடத்தில் சேராமல் பார்த்துக் கொள்வதும் , அந்த வரி கொண்ட வருமானத்தின் மூலம் ஏழைகளுக்கும் பாட்டாளி மக்கள் வாழ்வு முன்னேற்றமும் திட்டங்களை வகுத்துக் கொடுப்பது தாகும். நாட்டின் நாணயம் அதிகமாக வேகமாகப் பல துறைகளில் பல மட்டத்தில் நகரும் வண்ணம் பொருளாதார கட்டமைப்பை வருடம் வருடம் சீர்படுத்து கொண்டே செல்வது - அதற்குத் தக்க நாட்டின் கட்டமைப்பை உயர்த்துவது. தொழிற்சாலைகள் நடத்தினால் அரசு ஊழியர் தொழில் சங்கத்திடம் நாட்டை அடைமானம் தான் வைக்க வேண்டி வரும். இந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நம் நாட்டுடைய நிலையம் மோசமாகக் காரணமும் புரியும். ஆகையால்
நான் மீண்டும் எப்போதும் கூறுவதைத் தான் கூற விரும்புகிறேன் "தயவு கூர்ந்து மீம்ஸ் வருவதை எல்லாம் நம்பாதீர் - கொஞ்சம் தேடி ஆய்வு தகவல்களைப் படித்து உணர முற்படுங்கள்... இல்லை உணர்வைத் தூண்டும் வசனங்களால் இந்த சமூகமும் வெனிசுலா போல் அகதிகளாகக் கிளம்பு வேண்டி வரும்.
{வீடியோ பதிவு யூடியூப் சேனலில் வெளியிடபட்டுள்ளது.}
-மாரிதாஸ்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக