பகிர்ந்து கொண்டவர்கள்!

திங்கள், மார்ச் 25

அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு?

சிறப்பான கட்டுரை சாரு அவர்களே. முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்ற தரம் தாழ்ந்த அரசியல் வியாதிகளை தயவுசெய்து மாணவிழாக்களில் பேச மற்றும் வாழ்த்த அழைக்காதீர்கள் . உங்கள் திருமணம் ஒரு மங்களகரமான நல்ல நிகழ்வு. அந்த நிகழ்வில் இப்படி அடுத்தவர் மனம் புண்படும்படி பேசி மனவருத்தத்தை உண்டாகும் தீய எண்ணங்கள் மனமக்களையே பாதிக்கும். அனைவருக்கும் நல்லதையே நினைப்போம் .
-------------------------------------------------------------------------------------------------------



'தி.மு.க., தலைவர்கள் பலரை, ஏன் இந்துக்களுக்குப் பிடிக்கவில்லை' என்று, என் நண்பர் ஒருவரை கேட்டேன். 'இந்துக்களை திட்டுவது தான் மத சார்பின்மை என, அவர்கள் நினைப்பதால், பிடிக்கவில்லை' என்றார் அவர். உண்மைதான்.


மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா... அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு?

எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது.

முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின்? ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது.

மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். குங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. 'பகுத்தறிவால்' காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.



அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது? வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா? தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா? தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்!

உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, 'சிசிடிவி'யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது.

காலை வெட்டி விட்டனர்; 'எம்பார்மிங்' பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.

எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். 'அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது' என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள்.

மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.

-சாருநிவேதிதா, எழுத்தாளர்

1 comments:

நான் சொன்னது…

//யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன//

உண்மை.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக