பகிர்ந்து கொண்டவர்கள்!

வெள்ளி, டிசம்பர் 7

இனி எவருக்கும் வேண்டாம் பாரத ரத்னா....

 நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆவல் இது. திரைப்படம் என்றால் காத தூரம் ஓடும் நிலைமைதான் எனக்கு. திரை அரங்கிலும், வீட்டில் டி.வி . யில் கூட சினிமா பார்க்க பிடிப்பதே இல்லை. ஆனால்  நேற்று பிளசில் Asif Meeran AJ என்ற நண்பர்

 // இன்று மதியம் 3 மணிக்கு ( DD National - Podhigai ) தூர்தர்ஷன் - பொதிகை தொலைக்காட்சியில் அண்ணல் அம்பேத்கரின்-(தமிழ் பதிப்பு ) திரைப்படம் திரையிடப்படுகிறது....வாய்ப்பு இருப்பவர்கள் திரைப்படத்தை பதிவு செய்து குறுந்தகடாக மாற்ற ஆவணம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்...(குறிப்பு :- இது வரை தமிழில் அண்ணல் திரைப்படம் வரவில்லை என்பது தெரிவித்துக்கொள்கிறேன் )../// என எழுத, 

அதனை நான் பார்த்தபோது மணி மதியம் 2.55. சடக்கென்று அணைத்தையும்  மூடி வைத்துவிட்டு டி வி.யை  போட்டுவிட்டு அமர்தேன்.
டைட்டிலில் NFDC  என்று வந்தபோது வழக்கம்போல
 //ஐயைய்ய........... டாக்குமெண்டரி போல பண்ணியிருப்பார்களே !// 
என்ற ஐயம் வர, பிறகு //டைரக்டர் ஷியாம் பெனகலின் மேற்பார்வையில் // என்ற காப்ஷன் பார்த்து ஆறுதலானேன்.

அண்ணல் அம்பேத்கராக நடிக்க மம்மூட்டி தவிர வேறு எவரும் லாயக்கில்லை என்பது அவரின் உருவம். நாம் புகைப்படங்களில், அவரின் உருவ சிலைகளில் பார்த்து மனதில் கொண்டுள்ள அம்பேத்கரின் அதே உருவத்தை திரையில் கொண்டு வந்த பொருத்தம்.அதிலும் சுதந்திர போராட்ட இறுதிகாலங்களில் வயதான காலங்களில்  அம்பேத்கரின் முன் நெற்றியில் தெரியும் வழுக்கை தலை.


சிறுவயதில் கல்யாணம், பள்ளி படிப்பு, கல்லூரி, பட்டம் என பிறகு மேல் படிப்புக்காக அவர் அமெரிக்காசெல்வது,மீண்டும் இந்திய திரும்ப வருவது,இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் ஆவது போன்ற தருணங்களில் அவர் எதிர்கொள்ளும் சவால்கள்,பிரச்சனைகள்.தீண்டத்தகாதவராக அவரை நடத்தும் இடங்கள், அவர் படும் அவமானங்கள்,இங்கிலாந்தில் வெள்ளை தொளுக்கே உரிய அகம்பாவம், திமிர் இவைகளை சமாளிப்பது என அவர் பட்ட பாடுகளில் சிலவற்றை காட்டுவதே மனதை பிசையும்.அவைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் தான் கொண்ட காரியத்தில் முழு மூச்சாய் நின்று சாதிக்கிறார்.அது ஒன்றும் சாதாரணம் இல்லை. தீண்டாமை கொடுமைகளை தம் இன மக்கள் அனுபவிப்பதை, அவர்கள் திக்கு தெரியாமல், செய்வதறியாமல் இருக்கும் அவலம் எண்ணி கோபமும், வேதனையும் படுவது மம்மூட்டியின் நடிப்பில் இயல்பாக இருக்கிறது.காந்தியும் அம்பேத்கரும் சந்திக்கும் அந்த காட்சிகளுக்கு காத்திருந்தேன்,அதற்கு முன்னரே இவர்கள் இருவரும் கருத்தில் மாறுபடும் காட்சிகள் வந்துவிடுகின்றன. மகாத்மாக்கள் பற்றி சொல்லும் விளக்கங்கள் உண்மையும் கூட. இந்துக்களும், முஸ்லிம்களும் தங்கள் மக்களை விலை பேசுவதை கண்டிக்கிறார்.காந்தியை முதன் முதலில் இவர் சென்று சந்திக்க காத்திருப்பதும், பின்னர் இருவரும் உரையாடுவதும், எதிமறையான கருத்துக்கள அங்கே வெடித்தாலும் காட்சிகள் கண்ணியமாக இருக்கின்றன. அம்பேத்கரை "இன்னார் " என்றே அறியாமல் அவரை சந்திக்க விழைவதும் கருத்து மோதல்களால் பின்னர் அவர் யார் என்று புரியும்போது காந்தியின் எரிச்சலும் கோபமும் கூட ரசமாகவே இருக்கும். அதுவரையில் காந்தி அம்பேத்கரை " ஒரு புனே நகரத்து அந்தணராகவே " தப்பாக நினைத்துக்கொண்டு உரையாடியதை எண்ணி தமக்கு ஏன் விபரங்கள் சொல்லப்படவில்லை என அவர் தன் உதவியாளரிடம் கோபம் கொள்கிறார். மகாத்மாவையும், காங்கிரசையும் அவ்வப்போது விமர்சித்து சொல்லும் வசனங்களே படத்தில் நகைசுவை காட்சிகளாக பரிமளிக்கின்றன.


மாற்று கருத்துள்ளவர்களை இந்திய தேசிய காங்கிரசும்,காந்தியும் மன்னிக்கவே மாட்டார்கள் என்பது அம்பேத்கர் வாழ்க்கையே ஒரு சான்று. சைமன் கமிஷனில் இவர் ஒரு உறுபினராக சேர்ந்ததற்கு காங்கிரஸ்காரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள் செய்கிறார்கள்,தேசதுரோகி பட்டமும் கூட கிடைகிறது.காங்கிரஸ் மற்றும் காந்தி இரண்டாம் வட்ட மேஜை மகா நாட்டை புறக்கணிப்பதும், அண்ணல் அதே மாகா நாட்டில் கலந்து கொண்டு தம் மக்களுக்காக தேர்தலில் வாக்குரிமையும், தனி தொகுதிகளும் வேண்டுமென வற்புறுத்துவார். காந்தி இதனை முற்றிலும் எதிர்பார். இந்துகள் அவ்வாறு பிரியக்கூடாது என்பது காந்தியின் வாதம். தீண்டாமையை என்ன செய்வீர்கள் ? என்ற அம்பேத்கரின் கேள்விக்கு காந்தியிடம் இருந்து பதில் இருக்காது.கிருஸ்துவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் ஆதராவாக இருக்கும் காந்தி தம் இன மக்கள் மீது மட்டும் அக்கறை இல்லாமல் இருப்பதும்,வெறும் தேர்தலுக்காக மட்டுமே அவர்களை பயன்படுத்த எண்ணுவதும் அதனை அறிந்து அண்ணல் கோபம் அடைவதும் முக்கியமான காட்சிகள்.காந்தி ஒரு அரசியல் தலைவர் அன்றி அவர் ஒன்றும் மகாத்மா அல்ல என்ற அம்பேத்கரின் பார்வையில் படம் இருக்கும். அதுதான் உண்மையும் கூட அல்லவா ? தான் செய்ய நினைத்த தம் மக்களின் சமூக நிலை மாற்றத்துக்கு முயலும் போதும்,தீண்டாமை ஒழிப்பை செய்ய இயலாமல்  காந்தியால் தடை வரும் போதும் ,தொட்டதெற்கெல்லாம் உண்ணாவிரதம் இருக்கும் காந்தியின் போக்கை இவர் கிண்டலடித்து அவரிடமே சொல்வது பிரமாதம்.


அவரையும், அவரின் மக்களையும் தங்களின் மதங்களுக்கு மாறச்சொல்லி ஒவ்வொரு மதத்தின் பிரதிநிதிகளிடமிருந்து வரும் அழைப்புக்களை மிக சாதுர்யமாக கேள்விகள் கேட்டு அவர்களை வாயடைக்கும் விதம் ரசிக்கலாம்.தான் ஏன் புத்த மதத்தினை தேர்ந்தெடுத்தார் என்ற விளக்கம் மிகவும் லாஜிக்கலாக இருக்கும்.கருது வேறுபாடுகள் இருந்தாலும் காந்தியின் மீது அண்ணலுக்கும், அம்பேத்கர் மீது காந்திக்கும் இருந்த அந்த புரிதல் ,மரியாதை இவைகளையும் அழகாக காட்டப்படுகின்றன. முஸ்லிம் லீக் மற்றும் ஜின்னாவின் இந்திய பிரிவினயினை கடுமையாக எதிர்த்தார்.விடுதலை அடைந்த இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்ட வரைவு வேலைகளை மேற்கொள்ளும் தேவை வரும்போது காந்தி, நேருவிடம் உரையாடும் இடம். காந்தியே அம்பேத்கரை பொருத்தமானவராக சொல்லுவார். அதே போல காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியினை கேட்கும்போதும் அண்ணல் அதிர்ந்து நடை தளர்ந்து உருகும் காட்சிகள் என சொல்லலாம்.கதையின் நடப்புடன் இணைந்து மென்மையான உணர்வை தந்து பரவசப்படுத்தும் இசை. மொழி மாற்றம் செய்யப்பட்ட உணர்வே இல்லாமல் மிக இயல்பான தமிழ்வசனங்கள் .நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

 // தேசிய வாதியாக இருக்கவேண்டுமெனில் அவர் காங்கிரஸ் காரராகத்தான்  இருக்கவேண்டும் என்று அவசியமில்லை // 
என்ற கருத்தை அவர் வல்லபாய் படேலிடம் கூறும் இடம் உயர்ந்த நகைச்சுவை. தன்னை கவனிக்கவும் கூட யாரும் இல்லாமல், சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டுக்கொண்டு அவர் வாழ்ந்த வாழ்கை மிகவும் பரிதாபம். கடமைகள், வேலைகள் பளு மிக அதிகம் அதன் பின்னரே அவர் மறுமணம் செய்ய கொள்ள முடிவெடுக்கிறார்.


// Palace on a dung heap // என்ற வசனம் வரும் காட்சி சுருக்கென குத்தும்.
அம்பேத்கர் ஒரு புரட்சிகாரர்தான் அனால் முற்றிலும் அகிம்சை வழியில்தான் இறுதிவரை வாழ்ந்தார். உடனே "அவர் சிக்கன் தின்றார்" போன்ற விதண்டாவாதங்கள் வேண்டாம். அவர் தம் மக்களை உரிமைக்காக போறோடசொன்னார். ஆனால் எபோழுதும் வன்முறையை அவர் ஒரு ஆயுதமாக கொள்ளவில்லை  என்பது என்னைக்கவர்ந்த ஒன்று 

யு டியூபில் இந்த படம் ஆங்கில மொழியில் உள்ளது.


இறுதியாக: 

அம்பேத்கரின் தியாகங்களுக்கும்,அற்பனிப்புக்களுக்கும் இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து சிறப்பித்துள்ளது.அம்பேத்கர் நினைவு நாளில் இந்நாளைய அணைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தவறாமல் அவரின் படத்துக்கும்,சிலைகளுக்கும்  மலர்களை பொழிந்தும்,மாலைகள் அணிவித்தும் சடங்காக ஒரு கும்பிடு போட்டு செல்வார்கள்.உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள்.இந்திய அரசு கலை, அரசியல், அறிவியல், விளையாட்டு என அணைத்து துறைகளிலும் யாரவது ஒருவருக்கு எப்போதாவது பாரத் ரத்னா விருதை அளித்து கௌரவிக்கிறது. தயவு செய்து இனிமேல் அந்த விருது இனி எந்த அரசியல் வாதிகளுக்கும் தரலாகாது என்ற முடிவை மத்திய  அரசிடம் வற்புறுத்தி செயல்படுத்த வேண்டும்.இனி இங்கு பாரத ரத்னா பெரும் அளவிற்கு துகுதியுள்ள எவரும் அரசியலில்  இல்லை. அண்ணல் அம்பேத்கருக்கு அவ்விருது அளித்து சிறப்பித்த பின்னர் அந்த உயரிய விருது ஏற்படுத்தப்பட்ட அவசியமும் முடிவுக்கு வந்துவிட்டது.இனி அந்த விருதினை வேறு எவருக்கும் அளித்து அண்ணல் அம்பேத்கரை, தன்  நலம் காணாத அந்த பிறவியை  இழிவு படுத்தாதீர்கள்.

 கண்ட குப்பை படங்களையும் , கலர் ஜிகினா பேப்பர் செல்லுலைடுகளும் எல்லா தியேட்டர்களிலும் ஓடும்போது இந்த திரைபடம் மட்டுமே ஏன் பல வருடங்கள் ஆகியும்  (படம் வெளிவந்தது 1999 ஆம் ஆண்டில்) நாட்டு மக்கள் காண முடியாமல் போனது? 3 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவர் தம் மக்களை உரிமைக்காக போறோடசொன்னார். ஆனால் எபோழுதும் வன்முறையை அவர் ஒரு ஆயுதமாக கொள்ளவில்லை என்பது என்னைக்கவர்ந்த ஒன்று

சிறப்பான பகிர்வுகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கண்ட குப்பை படங்களையும் , கலர் ஜிகினா பேப்பர் செல்லுலைடுகளும் எல்லா தியேட்டர்களிலும் ஓடும்போது இந்த திரைபடம் மட்டுமே ஏன் வெளிவந்து ஒன்பது வருடங்களாகியும் நாட்டு மக்கள் காண முடியாமல் போனது? //

இதுதான் இந்தியாவுக்கு இருக்குற சாபக்கேடு, எவனாவது துப்பாக்கியை தூக்கிட்டு நின்னாம்னா மட்டும் விமர்சனம் போட்டு கொல்லுவாங்க...!

S.டினேஷ்சாந்த் சொன்னது…

அருமையான பதிவு.
நல்ல படங்களை ரசிப்பவர்கள் மிகக் குறைவாக இருப்பதனால் பல நல்ல படங்கள் குப்பைக் கூடைக்குள் செல்கின்றன.
நேதாஜியின் வரலாறும் காந்தியின் மாற்றுக் கொள்கை சகியாமைக்கு உதாரணமாக உள்ளது.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக